/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுாலிழையில் உள்ளாடை தயாரிப்பு
/
செயற்கை நுாலிழையில் உள்ளாடை தயாரிப்பு
ADDED : ஜூலை 19, 2025 12:16 AM
திருப்பூர்: உலகம் முழுதும் புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், ஆயத்த ஆடை மட்டுமல்ல, உள்ளாடை தயாரிப்பிலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டதாக, ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பின், உலகம் முழுதும் மக்களின் வாழ்க்கை முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திலும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
வர்த்தகர்கள் மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரிடமும் ஆடை தேர்வு செய்யும் போக்கு மாறியுள்ளது. பயன்படுத்தும் துணி, நிறம், 'பிட்' போன்றவை குறித்து பல்வேறு விசாரணை நடத்துகின்றனர். அதற்காக, கூடுதலாக செலவழிக்கவும் தயாராகிவிட்டனர்.
திருப்பூர் உள்ளாடை உற்பத்தியாளர்களும், புதிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தியில் புதிய மாற்றங்களை செய்து வருகின்றனர்.
துணிகளின் தரம், துணிகளை சாயமிட்டு தயார்செய்வது, புதிய வகையிலான எலாஸ்டிக் பயன்பாடு, புதிய டிசைன் வடிவமைப்பு, பிரின்டிங், காண்போரை கவரும் வகையிலான 'பேக்கிங்' என, ஆடை மட்டுமல்ல, உள்ளாடை வடிமைப் பிலும் புதிய பார்முலாவை கையில் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா துணை தலைவர் பாலசந்தர் கூறியதாவது:
உலகளாவிய ஜவுளி சந்தையில் புதிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்ளாடை உற்பத்தியில் கூட, இன்றைய இளம் தலைமுறையினர் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். பருத்தி நுாலிழையில் தயாரித்த உள்ளாடைகள் மட்டுமே அதிகம் விற்பனை நடக்கும். தற்போது, 'லைக்ரா' போன்ற செயற்கை நுாலிழை கலந்து தயாரித்த துணியில், உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதுமட்டுமல்ல பிரத்யேகமான மரக்கூழ் கொண்டு தயாரிக்கப்படும், 'மைக்ரோ மொடால்' மற்றும் 'டென்சில்' துணிகள் மற்றும் மூங்கில்நார் இழையில் உருவாகும் துணிகளில் தயாராகும் உள்ளாடைகளை அதிகம் விரும்புகின்றனர். வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.