/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீசில் வீணாகும் டேபிள்கள்
/
கலெக்டர் ஆபீசில் வீணாகும் டேபிள்கள்
ADDED : ஜன 24, 2025 11:41 PM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகம், அனைத்து அரசுத்துறைகளை உள்ளடக்கி, ஏழு தளங்களுடன் செயல்படுகிறது. தரைதளத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கம்; முதல்தளத்தில் வருவாய்த்துறையின் சிறு கூட்ட அரங்கம், இரண்டாவது தளத்தில் வருவாய்த்துறையின் பெரிய கூட்ட அரங்கம் உள்ளன.
இதேபோல் ஒவ்வொரு தளத்திலும், வெவ்வேறு துறை பயன்பாட்டுக்கான கூட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கூட்ட அரங்குகளிலும், மர டேபிள் மற்றும் சேர்கள் போடப்பட்டு, ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் மைக்களும் அமைக்கப் பட்டுள்ளன.
துணை முதல்வர் உதயநிதி, கடந்த டிசம்பர் 19ம் தேதி திருப்பூருக்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், துணை முதல்வர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப் பட்டது.
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, அறை எண்: 401 ல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பயன்பாட்டுக்கான அரங்கில் நடத்தப்பட்டது. இதற்காக, அந்த அரங்கிலிருந்த அனைத்து டேபிள்கள், மைக்களும் அகற்றப்பட்டன. டேபிள்கள் அனைத்தும் வராண்டாவில் போடப்பட்டது. அரங்கம் முழுவதும் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு, நலத்திட்ட உதவிகள் பெறவந்த பயனாளிகள் அமரவைக்கப்பட்டனர்.
துணைமுதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. ஆனால் இன்னும், அகற்றப்பட்ட டேபிள்கள், மீண்டும் அரங்கில் பொருத்தப்படவில்லை. போட்டது போட்ட நிலையில், அனைத்து டேபிள்களும் வராண்டாவிலேயே துாசுபடிந்தநிலையில் கிடக்கின்றன.
தங்கள் பயன்பாட்டுக்கான அரங்கில் டேபிள்கள் இல்லாததால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையினர், கூட்டங்கள் நடத்துவதற்கு வேறு அரங்குகளையே பயன்படுத்தவேண்டியுள்ளது. டேபிள்கள் சிதிலமடைந்து வீணாவதற்குள், அவற்றை மீண்டும் கூட்ட அரங்கினுள் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.