ADDED : பிப் 10, 2024 12:26 AM

திருப்பூர்;தை அமாவாசை தினமான நேற்று, திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன; ஏராள மான பக்தர்கள் வழிபட்டனர்.
தை மாதத்தில் வரும் பவுர்ணமியில், தைப்பூசம் கொண்டாடப்படுகிறது; அதேபோல், அமாவாசையிலும், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது; தை அமாவாசை நாளில், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது.
தை மாத அமாவாசை நாளான நேற்று, திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கே, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள், காலை முதல் கோவில்களில் வழிபட்டனர். உச்சிப்பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், பிச்சம்பாளையம் கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும், தை அமாவாசை வழிபாடு களைகட்டியிருந்தது.
தர்ப்பணம்
அமாவாசை தோறும், முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில், தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று, கோவில்கள், ஆற்றங்கரைகளில், தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் பார்க்ரோடு ராகவேந்திரா கோவில் உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. குடும்பத்தில், மறைந்த முன்னோர்களுக்கு, காய்கறி, பச்சரிசி, எள் மற்றும் தண்ணீர் படைத்து, பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.