/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவிதையில் மாநில முதலிடம் : தமிழோசை முழங்கிய மாணவி
/
கவிதையில் மாநில முதலிடம் : தமிழோசை முழங்கிய மாணவி
ADDED : அக் 30, 2025 12:48 AM

திருப்பூர்: ''மாநில அளவிலான கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரியாக வேண்டும்'' என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு, மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு மாநில அளவிலான போட்டிகள், சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தன. திருப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவி சாலை யுவஸ்ரீ, மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று, மாநில அளவிலான கவிதை போட்டியில் பங்கேற்றார்.
போட்டி துவங்கியவுடன் தான் அனைவருக்கும் தலைப்புகள் வழங்கப்பட்டன. 'தரணி எங்கும் ஒலிக்கட்டும் தமிழோசை' என்ற தலைப்பு வழங்கப்பட்டதும், கவிதை எழுதிய சாலை யுவஸ்ரீ மாநில அளவில் முதலிடம் பிடி த்தார்; இதற்காக, அவருக்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
சாலை யுவஸ்ரீ கூறியதாவது:
என் தந்தை சாலை சிவகனி; தையலகம் நடத்திவருகிறார்; தாய் சாலை கனகவல்லி; தனியார் பள்ளியில் ஆசிரியர். தாய் மொழியான தமிழ் மொழி மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். படிப்பு ஒருபுறமிருக்க, நேரம் கிடைக்கும் வேளைகளில் தமிழில் கவிதைகள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். இதுவரை, 70 பக்கங்களுக்கு மேல் கவிதை எழுதிவைத்துள்ளேன். அவற்றை அச்சிலேற்றவும் ஆயத்தமாகிவருகிறேன்.
மாநில அளவிலான கவிதை போட்டியில் முதலிடம் பிடித்ததை பெருமையாக கருதுகிறேன். நன்றாக படித்து அரசு பணியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை; குறிப்பாக, தமிழ் வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து, தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

