/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரியில்லா ஒப்பந்தம் சாத்தியம்; ஏற்றுமதி வளர்ச்சி நிச்சயம்
/
வரியில்லா ஒப்பந்தம் சாத்தியம்; ஏற்றுமதி வளர்ச்சி நிச்சயம்
வரியில்லா ஒப்பந்தம் சாத்தியம்; ஏற்றுமதி வளர்ச்சி நிச்சயம்
வரியில்லா ஒப்பந்தம் சாத்தியம்; ஏற்றுமதி வளர்ச்சி நிச்சயம்
ADDED : நவ 25, 2024 12:10 AM
திருப்பூர்; பிரிட்டனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், 2025 முதல் காலாண்டில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் மேம்படவும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு நிலையான வளர்ச்சி பெறவும், வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது வழக்கம். முழுமையான வரி விலக்கு இல்லாத வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இயலாத நிலையில், குறிப்பிட்ட சலுகையுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
நம் நாடு, வங்கதேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், கொரியா, மொரீசியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம், ஒவ்வொரு ஆண்டும் சீரான வளர்ச்சி பெற்றுள்ளது.
குறிப்பாக, ஐக்கிய அரபு நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இந்தியா ஏற்றுமதி செய்யும் 'டாப் -10' நாடுகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாளைய பேச்சுவார்த்தையால், ஐரோப்பாவின் சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மட்டும் ஏற்பட்டுள்ளது; வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும், முயற்சியும் தொடர்கிறது.
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது பிரிட்டன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2023-24ம் ஆண்டின், ஏப்., முதல் செப்., மாதம் வரையிலான மாதங்களில், 5,302 கோடி ரூபாயாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் (2024-25) ஏப்., முதல் செப்., வரையிலான காலகட்டத்தில், 5,674 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்த நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரேசிலில் நடந்த 'ஜி -20' உச்சி மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு, இதற்காக மீண்டும் அச்சாரமிட்டுள்ளது.
20 சதவீதம் அதிகரிக்கும்
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரிட்டனுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, வரும் காலங்களில் மென்மேலும் வளர்ச்சி பெறவும் வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருந்தது; பிரிட்டன் பிரதமர் மாற்றத்தால், அவ்வப்போது சுணக்கம் ஏற்பட்டது. தற்போது புதிய பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிறது. வரும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள், ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அடுத்த நிதியாண்டில் இருந்து, நடைமுறைக்கு வந்தால், பிரிட்டனுடனான வர்த்தகம் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.