/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் 'ஆன்லைனில்' வரி செலுத்தலாம்
/
ஊராட்சிகளில் 'ஆன்லைனில்' வரி செலுத்தலாம்
ADDED : நவ 02, 2025 03:20 AM
திருப்பூர்: 'ஆன்லைன்' மூலமாக, ஊராட்சிகளில் வரியினங்களை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு, மொபைல் போனில் நினைவூட்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஊராட்சி அளவில், பொதுமக்கள் வரி செலுத்தும் சேவையும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு களாக, ஆன்லைன் வாயிலாக வரி செலுத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகிய வரியினங்களை, ஆன்லைனில் எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் மொபைல் போன் எண் பதிவு செய்து,'இ-மெயில்' முகவரியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், தேர்தலுக்கு முன்னதாக வரிவசூல் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த அரசுஉத்தரவிட்டுள்ளது. மார்ச் மாத இறுதிவரை வரிவசூல் பணிகளை செய்ய முடியாது; தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும். எனவே, முன்கூட்டியே வரிவசூல் பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மொபைல் எண் பதிவு செய்துள்ளவர்களுக்கு, ஆன்லைனில் தானியங்கி முறையில், சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரியினங்களை செலுத்துமாறு, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், 'https://vptax.tnrd.tn.goc.in என்ற இணையதள முகவரி இணைப்பும் அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள 'லிங்க்' மூலமாக, தங்களது அடிப்படை விவரங்களை பதிவு செய்து, வரியினங்களை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள வரிசெலுத்துவோர், 4.67 கோடி பேர் இதுவரை, ஆன்லைன் வரி சேவை தளத்தை பார்வையிட்டுள்ளனர்.
ஊராட்சி அலுவலகம் சென்று காத்திருக்காமல், மொபைல் போனுக்கு தகவல் வருவதால்,எளிதாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி, அதற்கான வரி ரசீதையும் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம் என, ஊராட்சி செயலர்கள் தெரிவித்துள்ளனர்.

