ADDED : நவ 12, 2024 06:20 AM
திருப்பூர் ; 'குடிநீரை சரியான அளவில் சுத்திகரிப்பு செய்து வினியோகிக்க வேண்டும்' என, நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், பூண்டி நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:
திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு மேட்டுப் பாளையம், பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் வினியோகிக்கப்படுகிறது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், வினியோகிக்கப்படும் குடிநீர் சேறு கலந்த நிலையில் வினியோகிக்கப்படுகிறது.
மழை காரணமாக சேறுடன் சுத்திகரிப்பு நிலையம் சென்றடையும் நீர், அதை சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு அலுவலர்கள், தேவைக்கேற்ப குளோரினேஷன் வாயு செலுத்தி, பருகும் தன்மை கொண்ட பாதுகாக்கப்பட்ட நிலையில், நீர் வினியோகம் செய்வதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதே போன்று, நகராட்சியில் உள்ள கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீரை நிரப்பி, மக்களுக்கு வினியோகிக்க துவங்கும் முன், தெளிந்த நிலையில் நீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூண்டி நகராட்சியில் உரிய அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பினும், போதிய மேற்பார்வை இல்லாததால், கடந்த ஒரு மாதமாகவே, 'டீ டிகாஷன்' நிறத்தில் சேறு கலந்து, நிறம் மாறிய நீரை மக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது; உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.