/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ
/
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ
ADDED : டிச 22, 2024 02:21 AM

திருப்பூர்:திருப்பூர், காங்கேயம் ரோடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஷாம்நாத், 38. முதலிபாளையம் 'சிட்கோ'வில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு தயாராகும் பின்னலாடைகளை, மணியகாரம்பாளையத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு கொண்டு சென்று, ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு, பகுதி வாரியாக அனுப்பி வருகின்றனர்.
மணியகாரம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தின் ஒருபுறம், நேற்று காலை 8:45 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவ துவங்கியது. பணியாளர்கள் அலறி வெளியேறினர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை தலைமையில், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. காம்பவுண்டு சுவரை, இயந்திர உதவியுடன் இடித்து, நாற்புறமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் நிட்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீயில், பின்னலாடைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. கட்டடம் முழுதும் சேதமடைந்துள்ளது. தீ விபத் துக்கான காரணம் மற்றும் பொருட்களின் சேத மதிப்பீடு குறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.