/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாட்கோ' வளாகம் ரூ.12 கோடியில் மேம்பாட்டு பணி
/
'தாட்கோ' வளாகம் ரூ.12 கோடியில் மேம்பாட்டு பணி
ADDED : பிப் 13, 2025 07:28 AM
திருப்பூர்; ''திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள 'தாட்ேகா' வளாகங்களை சிறப்பு திட்டம் மூலம் சீரமைக்கலாம்'' என்று சட்டசபை பொது நிறுவனங்கள் குழு யோசனை தெரிவித்துள்ளது.
திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள 'தாட்கோ' பின்னலாடை தொழிற்பேட்டை, 1995ம் ஆண்டு, 9.38 கோடி ரூபாய் மதிப்பில், 140 ஏக்கரில் அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக, 100 ஏக்கர் பரப்பில், தலா 30 சென்ட் பரப்பளவில், 112 தொழிற்கூடங்கள் கட்டப்பட்டன; அவற்றில், 54 கூடங்கள் மட்டும் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டு, அவற்றில், சில கோர்ட் வழக்கால் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தொழிற்கூடங்கள், பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன.
ஒவ்வொரு பிளாக்கிலும், சில தொழிற்கூடங்கள் மட்டும், முறையான பராமரிப்புடன் இயங்கி வருகின்றன. தமிழக அரசு, 'தாட்கோ' தொழிற்பேட்டை புதுப்பிக்க, 50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது. அதில், 12 கோடி ரூபாய் மதிப்பில், தொழிற்பேட்டை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தார் ரோடு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து, பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பழுதான கட்டடங்களை பராமரித்து, பயனாளிகளுக்கு வழங்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை குழு பார்வை
தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார், உறுப்பினர்கள் அசோகன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன், கடம்பூர் ராஜூ, கிரி, சிந்தனைச்செல்வன், வேலு மற்றும் தமிழக சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர், நேற்று திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயேஸ்வரன், 'தாட்கோ' செயற்பொறியாளர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.
'தாட்கோ' வளாகத்தில் இயங்கும் 'நிட்டிங்' நிறுவனத்தை பார்வையிட்டு, தரமான பின்னல் துணி உற்பத்தி குறித்து கேட்டறிந்தனர். கிரயம் பெற்றவர்கள், பராமரித்து வருகின்றனர்; தொழிற்கூடங்களை, சிலர் பயன்பாடின்றி மூடியுள்ளனர்.
மிகவும் பழுதான கட்டடங்களுக்கு பராமரிப்பு பணி செய்து, பயன்பாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, 'தாட்கோ' அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரமைப்புக்கு யோசனை
சட்டசபை குழு தலைவர் நந்தகுமார் கூறுகையில்,'' பராமரிப்பு பணிகளை செய்து முடித்தாலும், பயன்பாடற்ற கட்டடங்களை சரிசெய்து, முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டி, சிதிலமடைந்த கட்டடங்களில் திறனை ஆராய்ந்து பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை வாயிலாக, சான்றிதழ் பெற்ற, அதற்கு ஏற்ப புதுப்பிக்கவோ, புதிதாக கட்டடம் கட்டவோ முடிவு செய்யலாம். சிறப்பு திட்டத்தில் சீரமைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வழங்கலாம்,'' என்றார்.
பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட, சட்டசபை பொது நிறுவன குழுவினர், மாவட்ட அளவிலான பணிகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.