/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பக்தியில் சிறந்த 63 நாயன்மார்கள்' காமாட்சிபுரி ஆதீனம் புகழாரம்
/
'பக்தியில் சிறந்த 63 நாயன்மார்கள்' காமாட்சிபுரி ஆதீனம் புகழாரம்
'பக்தியில் சிறந்த 63 நாயன்மார்கள்' காமாட்சிபுரி ஆதீனம் புகழாரம்
'பக்தியில் சிறந்த 63 நாயன்மார்கள்' காமாட்சிபுரி ஆதீனம் புகழாரம்
ADDED : ஜன 19, 2025 12:26 AM

பல்லடம்,:   ''சிறந்த பக்தியால் மட்டுமே, கைலாயத்தை அடையும் பாக்கியம், 63 நாயன்மார்களுக்கு கிடைத்தது,'' என, பல்லடத்தில் நடந்த தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சியில், காமாட்சிபுரி ஆதீனம் பேசினார்.
பேரூர் ஆதீனம் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையத்தின் குருகுல சம்ஸ்கிருதி மாணவர்கள், 12 சிவாலயங்களுக்கு சென்று, தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அவ்வகையில், நேற்று பல்லடம் - சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டை சிவன் கோவிலில், தேவாரப் பண்ணிசை அர்ப்பணிப்பு செய்தனர்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:
தேவாரம் பாடல் பாடுவதால் துன்பம் விலகும்; கேட்பதால் இன்பம் கிடைக்கும். 63 நாயன்மார்களுக்கு மட்டுமே கைலாயத்தை அடையும் பாக்கியம் கிடைத்தது. இதற்கு அவர்களது அதீத கடவுள் பக்தியே காரணம். மதிப்பிட முடியாதது நமசிவாய மந்திரம். பிறப்பும், இறப்பும் இல்லாத மூலப் பரம்பொருளே இறைவன். பஞ்ச பூதங்களுக்கும் நன்றி தெரிவிப்பதே நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரமாகும்.
இந்த பஞ்சாட்சர மந்திரத்தை யார் கூறினாலும், வருகின்ற வல்வினைகளும் ஓடிவிடும். நாயன்மார்கள் நடக்கும்போதும் பஞ்சாட்சர மந்திரத்தை கூறினார்கள்.
குழந்தைகளை இப்போது இருந்தே பக்குவப்படுத்துங்கள். தான, தர்மம் கொடுக்கின்ற கை மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உள்ளது. வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லை. இந்த வாழ்க்கை கூட கடவுள் கொடுத்தது. நம்மால் இங்கு எதையும் உருவாக்க முடியாது.  அடியார்களுக்கு கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்.
மனித குலத்துக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, குருகுல சம்ஸ்கிருதி மாணவர்கள், தேவார கதைகளை கூறியபடி, இசையமைத்து பாடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  சிறப்பாக பண் இசைத்து பாடிய  மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

