/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி 'பை-பாஸ்' சாலையில் விபத்து ஒரு தொடர் கதை...
/
அவிநாசி 'பை-பாஸ்' சாலையில் விபத்து ஒரு தொடர் கதை...
அவிநாசி 'பை-பாஸ்' சாலையில் விபத்து ஒரு தொடர் கதை...
அவிநாசி 'பை-பாஸ்' சாலையில் விபத்து ஒரு தொடர் கதை...
ADDED : ஜன 24, 2025 03:23 AM

- நமது நிருபர் -
கோவை - சேலம் 'பைபாஸ்' சாலை, அவிநாசி - திருப்பூர் இடைப்பட்ட சாலையில் விபத்தும், உயிரிழப்பும் தினசரி நிகழ்வாகிவிட்ட நிலையில், விபத்துக்கான காரணம் மற்றும் கண்காணிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரம், அவிநாசியை மையப்படுத்தி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இணைக்கும் சாலையாக இருந்து வருகிறது. அதன் சந்திப்பு பகுதியாக திருப்பூர் நகரம், அவிநாசி, பல்லடம், அன்னுார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. கோவை - சேலம் பைபாஸ் ஆறு வழிச்சாலையில், தினமும், நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் இயங்குகின்றன. அதற்கேற்ப சாலை விபத்துகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோவை - சேலம் பைபாஸ் சாலையில், தெக்கலுார் - பழங்கரை இடைபட்ட ரோட்டில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இச்சாலையின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில், உயிர்பலிகள் அதிகரித்தன. இரவில் சாலையில் பயணிக்கும் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள், நின்றுக்கொண்டிருக்கும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீது மோதி விபத்து நேரிடுகிறது.
விபத்தில் சிக்குவோர் முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்; படுகாயமடைவோர், முதலுதவி சிகிச்சைக்கு பின், திருப்பூர் அல்லது கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்; இந்த இடைப்பட்ட இடைவெளியில் உயிரிழப்பு நேரிடுகிறது. எனவே, அவிநாசி அரசு மருத்துவமனையில், 'சிடி' ஸ்கேன், அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட உயிர் காக்கும் சிகிச்சை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
எம்.பி., வலியுறுத்தல்
இதற்கிடையில், அவிநாசி அரசு மருத்துவ மனையை, 120 படுக்கை கொண்ட, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மையமாக தரம் உயர்த்தும் கோரிக்கை, மக்கள் நல்வாழ்வு துறையின், தேசிய நல குழுமத்தின் பரிந்துரைக்கு, நீலகிரி எம்.பி., ராஜா வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், அதிநவீன ஆய்வுக்கூடம், ரத்த சேமிப்பு அறை, மகப்பேறு மற்றும் குழந்தை நலன் சார்ந்த, 24 மணி நேர சேவை மையம், தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன அரங்கு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் உட்பட, 120 படுக்கை கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் அமைக்க சட்டத்தில் இடமுண்டு என்ற நிலையில், அதற்கான அனுமதியை, தேசிய நல குழுமம் வழங்கியது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி அரசு மருத்துவமனை, சேலத்தில், சீலநாயக்கன்படி, சென்னையில் கடற்கரையோர பகுதியில் தீவிர சிகிச்சை மையம் அமைக்க, தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார இயக்கத்தின் இயக்குனர் நடவடிக்கை எடுக்கும் பரிந்துரையையும் வழங்கியது.
இந்த பரிந்துரை அடிப்படையில், மகப்பேறு மற்றும் குழந்தை நலன் சார்ந்த கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. மாறாக, தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம் எதுவும் தென்படவில்லை.
இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க, எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்டவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அதே நேரம், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

