/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளக்கரையை பலப்படுத்த வேண்டும்!
/
ஆண்டிபாளையம் குளக்கரையை பலப்படுத்த வேண்டும்!
ADDED : ஜன 24, 2025 11:24 PM

திருப்பூர்; திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமையில் நடந்தது.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி மற்றும் குளத்துப்பாளையம் விவசாயி கணேசன் ஆகியோர் அளித்த மனு:
ஆண்டிபாளையம் குளம் தற்போது நிறைந்துள்ளது. குளக்கரையில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றின் வேர்கள், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையே புகுந்து, கரையை பலவீனப்படுத்தியுள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றி, குளத்தில் கரைப்பகுதியை பலப்படுத்த வேண்டும். குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு மண் திட்டுக்களிலும், ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன; ஏராளமான பறவைகள் உள்ளன. மண் திட்டுக்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், பல்லுயிர் சூழலுக்கு பாதகமாகின்றன; பறவைகள் முட்களில் சிக்கி காயப்படுகின்றன. எனவே, மண் திட்டுக்களில் உள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றவேண்டும்.
சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் தெற்கு தாலுகா, முத்தணம்பாளையத்தில் உள்ள எனது விவசாய பூமியில், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளேன். கடந்த ஏழு மாதங்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக வருகிறது.
புகார் அளித்ததன் பேரில் நீர் மாதிரி சேகரித்துச்சென்ற மாசுகட்டுப்பாடுவாரிய அதிகாரிகள், ஐந்து மாதமாகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அருகில் சாய ஆலைகள் ஏதேனும் இயங்குகின்றனவா; சாயக்கழிவுநீர் சுத்திகரிக்காமல் திறந்துவிடப்படுகிறதா என, ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனு வந்து சேரலையா!
கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். கடந்த டிச., மாதம் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், விவசாயி ஒருவர் அளித்த மனு தங்களுக்கு வந்து சேரவில்லை என, வேளாண் பொறியியல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'மனு அளித்து, 30 நாட்களாகிறது; இன்னும் மனுவே வந்துசேரவில்லை என்கிறீர்களே; எப்படி எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்' என விவசாயிகள் குரல் எழுப்பினர்.
இதனால், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கனகராஜ், 'விவசாயிகள் அளிக்கும் மனுக்கள், குறைகேட்பு கூட்டம் முடிந்த உடன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கப்படும்; இப்போதே வாங்கிச் சென்று விடுங்கள்' என்றார்.

