/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் தண்ணீர் வினியோகம் ஜோதி நகரில் சாதித்த சங்கம்
/
தினமும் தண்ணீர் வினியோகம் ஜோதி நகரில் சாதித்த சங்கம்
தினமும் தண்ணீர் வினியோகம் ஜோதி நகரில் சாதித்த சங்கம்
தினமும் தண்ணீர் வினியோகம் ஜோதி நகரில் சாதித்த சங்கம்
ADDED : ஜூன் 29, 2025 12:10 AM

திருப்பூர் மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஜோதி நகர்; பிரதான நெடுஞ்சாலையான தாராபுரம் ரோட்டுக்கும், பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி.
இப்பகுதியை சுற்றிலும் பின்னலாடை நிறுவனங்கள் அமைந்துள்ளன. குடியிருப்பின் குறுக்கு வீதிகள் அமைதியாக பரபரப்பின்றி இருந்தாலும் பிரதான ரோடு பரபரப்பான வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படுகிறது.
ஜோதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சேகர், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் கூறியதாவது:
வீரபாண்டி ஊராட்சியாக இருந்த போது, இந்த குடியிருப்பு உள்ளூர் திட்டக் குழுமத்தின் அங்கீகாரம் பெற்று அமைக்கப்பட்டது. கடந்த, 1998ல் குடியிருப்பு பகுதி, மின் வாரிய ஊழியர்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது. மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றிய அலுவலர்கள் மனை வாங்கினர். பலர் பணி மாற்றம் பெற்று சென்று விட்டனர். சிலர் மட்டும் தற்போது இங்கு வசிக்கின்றனர். சிலர் வீடு கட்டி அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.
மாதம்தோறும் ஆலோசனை
மாதம் தோறும் ஆலோசனைக் கூட்டம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு மேற்கொள்கிறோம். சங்கம் சார்பில் குடியிருப்புக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறு பராமரிப்பு; இங்குள்ள விநாயகர் கோவில் பராமரிப்பு ஆகியன செய்யப்படுகிறது.
ஆறு வீதிகள் மட்டும் தான் உள்ளன. அனைத்து பகுதியிலும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆழ்துளைக்கிணறு மோட்டார் மூலம் தெரு மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு தினமும் தண்ணீர் கிடைக்கிறது.
குறைகள் களைய நடவடிக்கை
குடிநீரைப் பொறுத்தவரை தேவையான அளவு குறிப்பிட்ட இடைவெளியில் கிடைக்கிறது. தினமும் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்க துாய்மைப் பணியாளர்கள் வருகின்றனர். ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக சங்க நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளிப்பர். உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒற்றுமை பறைசாற்ற விழாக்கள்
ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு விழா போன்ற ஒற்றுமை பறைசாற்றும் விழாக்களை, சங்கம் சார்பில் நடத்துகிறோம். கொரோனா காலத்தில் பல்வேறு வித உதவிகளை எங்கள் சங்கம் சார்பில், உதவி தேவைப்படும் பகுதிகளில் செய்தோம்.
பசுமைப்பரப்பு உயர விருப்பம்
வீதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் முன் வந்தால் இன்னும் ஏராளமான மரக்கன்றுகள் நட இங்கு இடவசதி உள்ளது. சங்கமும் ஒத்துழைக்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சாலை, வீதி ஆக்கிரமிப்பு
கழிவுநீர் தேக்கம்
குடியிருப்பு பகுதியில் பிரதான ரோடு, 40 அடி; குறுக்கு வீதிகள் 23 அடி அகலத்துடன் உள்ளன. இதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானம் செய்துள்ளனர். முக்கியமாக கழிவு நீர் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து, முழுமையாகவே மூடப்பட்டு விட்டது. லே அவுட் அமைக்கப்பட்ட போது கட்டிய கால்வாய். தற்போது இதில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.
வீடுகள் முன் தேங்கி நிற்பதால் பெரும் சிரமம் நிலவுகிறது. சிலர் தங்கள் வீட்டு கழிவு நீரை ரோட்டில் பாய விட்டுள்ளனர். ஒரு குடியிருப்பில், ரோட்டில் குழி தோண்டி அதில் கழிவு நீரை குழாய் பதித்து இறக்கி விடப்பட்டுள்ளது. காலை நேரம் ரோட்டில் சுத்தமாக உடை அணிந்து கடந்து செல்லக் கூட முடியாத நிலை உள்ளது.