ADDED : டிச 07, 2024 07:03 AM

எந்த நேரத்திலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பாயலாம்; இமைப்பொழுதில் மரணத்தைத் தழுவலாம்; இருந்தாலும், நெஞ்சை நிமிர்த்தி, அச்சத்தை அடியோடு அகற்றி, தேசம் காக்கும் உன்னத சேவையை மேற்கொள்ள வினாடி நேரம் கூட, நம் ராணுவ வீரர்கள் தவறுவதில்லை. ஆம்; அவர்கள்தான் நம் தேசத்தின் 'எல்லை சாமி'கள்.முப்படைகளின் ராணுவ வீரர்கள், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், டிச., 7ல், ஆயுதப்படை கொடி தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது நலன் காப்பதில் ஒவ்வொரு குடிமகனும், தங்கள் பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதால், இந்நாளுக்கென்றே தனி மகத்துவம். 'போரில் ஊனமுற்ற வீரர்கள், வீர மரணமடைந்த வீரர்களின் மனைவி, பிள்ளைகளின் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டும்' என்பதே, இந்நாளின் கருப்பொருள்.
---
தேசம் காக்கும் பணியில் தங்களுக்கு இருந்த நேசம் மற்றும் எதிர்கொண்ட அனுபவங்களை நம்முடன் முன்னாள் ராணுவத்தினர் பகிர்ந்தனர்.
உணவருந்தும் தட்டில்
தெளித்து சிதறிய ரத்தம்
ராஜசேகரன், தலைவர், திருப்பூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம்:
1992 - 1994 காலகட்டம். நண்பர்கள் மூவருடன், கார்கில் எல்லையில் தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்; ஒரே தட்டில் உணவருந்தியபோது, திடீரென தட்டின் மீது ரத்தம் தெளித்தது. உடன் உணவருந்திக் கொண்டிருந்த என் நண்பர், 'எங்கிருந்து இந்த ரத்தம் தெளித்தது' எனக் கேட்டார்; எங்கிருந்தோ வந்து, அவரது மார்பில் துளைத்த தோட்டாவால் வெளிவந்த ரத்தம் தான் அது, என்பதை உணர நொடிப் பொழுதானது. இப்படித்தான் எல்லையை காக்கும் ராணுவ வீரனின் ஒவ்வொரு நொடியும் நகரும். ராணுவ வீரர்கள், அவர்களது குடும்ப நலன் காக்க, கொடி நாள் கடைபிடிக்கப்படுவதும்; கொடி நாள் வசூலில் திரட்டப்படும் நிதியை அவர்களது நலன் காக்க செலவிடப்படுவதும், வரவேற்கத்தக்கது.
---
பிறந்த குழந்தையைப் பார்க்கும்முன்
தேசத்துக்காக தந்தை வீர மரணம்
இளம்பரிதி, முன்னாள் ராணுவ வீரர்:தரைப்படையான மெட்ராஸ் ரெஜிமென்ட்டை சேர்ந்த நானும், என்னுடன், 20 பேரும் எல்லையில் தீவிரவாதிகளை கண்காணிக்கும் இரவு ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அந்த இடம் மேடு, பள்ளம் நிறைந்தது. மேடான பகுதி பாக்., எல்லை; தாழ்வான பகுதி நம் நாட்டின் எல்லை. ரோந்து முடித்து திரும்பி வரும் போது, ஒரு சந்திப்பு சாலையில் தீவிரவாதிகள் எங்களை மடக்கினர். துப்பாக்கியால் சுடத்துவங்கினர். பதில் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றோம். இதில், நம் வீரர்கள் மூன்று பேர் வீர மரணமடைந்தனர். அவர்களில், சுதர்சன் என்பவர் திருமணம் முடித்து, ஓராண்டு முடிந்த நிலையில், அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருந்தது. விடிந்தால் அவருக்கு விடுமுறை; மனைவியையும், பிறந்த பச்சிளம் குழந்தையையும் பார்க்கும் ஆவலில், ஊருக்கு செல்ல பெட்டி, படுக்கையை எல்லாம் தயாராய் வைத்து விட்டு, இரவு ரோந்து முடித்து விட்டு, ஊர் செல்லும் ஆவலில் இருந்தார். ஆனால், எதிரிகளின் துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்தார். காத்திருந்த அவரது மனைவியின் நிலை எண்ணி, பதைபதைத்து போனோம். நான் பணி ஓய்வு பெற்று, 19 ஆண்டு கடந்துவிட்ட போதிலும், இந்த சம்பவம், இனியும் என் மனதை கனக்க வைக்கிறது.
---
போர்க்களத்தைச் சந்திக்க
எந்நேரமும் தயார் நிலை
நித்யானந்தம், வி.ஏ.ஓ., - ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
எல்லையில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும், 'ரெடி டூ பைட்' (போருக்கு தயாராக) என்ற நிலையில், எந்நேரமும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்; போர்க்களத்தில் முன் வரிசையில் நிற்போம். எல்லை காக்கும் பணி என்பது, சவால் நிறைந்தது. போர்க்களத்தில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் பணிக்காலம் முடியும் வரை, உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பர்; பணி ஓய்வு பெறும் போது, மனதளவில் ஒரு இனம் புரியாத சோர்வு தென்படும். இதனால்தான், உடல் வலிமை சார்ந்த, செக்யூரிட்டி போன்ற காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். நான், 1996ல் ராணுவத்தில் சேர்ந்து, 2012ல் பணி ஓய்வு பெற்ற பின், குரூப்-4 தேர்வெழுதி, வி.ஏ.ஓ.,வாக தேர்ச்சி பெற்று, பணியில் சேர்ந்தேன். குரூப்-4 தேர்வில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீடு, நான் அரசு ஊழியனாக உதவியது. அதே போன்று, கொடி நாள் என்பதும், முன்னாள் ராணுவ வீரர்கள், அவரது குடும்பத்தினருக்கு நலன் பயக்கும் திட்டம்.
----
துப்பாக்கியால் குறிவைக்க
கட்டடத்தை உடைத்த கரம்
வெள்ளிங்கிரி, ஓய்வு பெற்ற ராணுவ சுபேதார்:
பஞ்சாபில் நடந்த 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'ல் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன். மோஹா என்ற கிராமத்தில் ஒரு கட்டடத்தின் மீது நின்று, துப்பாக்கியால் எதிராளிகளை குறி வைக்க வேண்டும் என்பது எனக்கான 'அசைன்மென்ட்'. கட்டடம் மீது ஏறினேன்; துப்பாக்கி முனையை குறி வைக்க இடம் கிடைக்கவில்லை; கட்டடத்தில் இருந்து செங்கல்லை கையால் உடைத்து, ஒரு துளை ஏற்படுத்தி அதனுள் துப்பாக்கி முனையை குறி வைத்தேன்; என் கை எல்லாம் ரத்தம். இச்சம்பவம் மறக்க முடியாதது.''காஷ்மீர் எல்லையில், நாம் நாட்டு எல்லைக்குமான இடைவெளி, 50 மீ., மட்டுமே. சற்று கவனக்குறைவாக இருந்தாலும், எதிராளிகள் நுழைந்து விடுவர். இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, நள்ளிரவை கடந்த, 2:00 மணி வாக்கில் லேசாக சில நொடிகள் கண்ணயர்ந்து விட்டேன்; அப்போது வெள்ளை புடவை அணிந்த ஒரு பெண், தலைவிரிக்கோலமாய் என்னருகே வந்து, 'துாங்குவதற்கா இங்கு வந்தாய்?' எனக்கூறி ஓங்கி அடித்தது போன்றதொரு உணர்வு. அதிர்ந்து சுதாரித்தேன். மறுநாள் காலை, என் நண்பர்களிடம் இச்சம்பவத்தை சொன்ன போது, 'இப்படி அடிக்கடி நடக்கும்' என்றார்கள். கொடிநாள் வசூல் வாயிலாக முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர், பிள்ளைகளுக்கு நல உதவி வழங்குவது, வரவேற்கத்தக்கது. மக்கள் மனமுவந்து தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
---
புயலில் சிக்காமல்
கப்பல் கரைசேர உதவி
ஜெயராமன், பணி ஓய்வு பெற்ற கப்பற்படை வீரர்: கப்பற்படை போலீசில் வேலை. கடல்மார்க்கமாக மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் போது, பைனாகுலரில் எல்லையை கண்காணித்த படி சென்ற போது, புயல் சின்னம் உருவாகி, 60 அடிக்கு மேல் கடல் நீர் மேலெழும்பி, பைனாகுலரில் தெளித்தது. புயல் சின்னம் உருவானதை, கப்பல் கேப்டனிடம் சொல்ல, விசாகப்பட்டினம் செல்லும் பாதையை மாற்றி, புதுச்சேரிக்கு சென்று கப்பலை பத்திரமாக கரை சேர்த்தார்; இந்த அனுபவம் மறக்க முடியாதது.அதே போன்று கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த ஒரு சர்வதேச கிரிமினலை பிடிக்கும் பணியிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்; எங்களுக்கெல்லாம் அவன் கொலை மிரட்டல் விடுத்தான். முப்படைகளில் இணையும் வீரர்கள், 'எந்நேரமும் தங்கள் உயிரை தியாகம் செய்வோம்' என சபதமேற்றுத்தான், பணியில் சேர்க்கின்றனர். அவர்களின் நலன் காக்கும் வகையிலான கொடிநாள் தினம் என்பது, பெருமைப்படக் கூடிய விஷயம்.
--
முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் நலன்காக்க, மாவட்டந்தோறும் கொடிநாள் வசூல் செய்யப்படுகிறது; மாவட்டங்களுக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலக்கை எட்டி சாதனை படைக்க, ஒவ்வொரு மாவட்டங்களின் கலெக்டர்களும் முனைப்புக் காட்டுகின்றனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
விவசாயிகள் குறைகேட்பு, பொதுமக்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடத்துவது போன்று, முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினருக்கும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கான பென்ஷன், கல்விக்கடன் உள்ளிட்ட அவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் உள்ள குறைகளை களைந்து வருகிறோம்.
அரசுத்துறையினர், பொதுமக்கள், தொழில் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கொடி நாள் நிதியை மனமுவந்து தாராளமாக வழங்குகின்றனர்.
தற்போது, கொடிநாள் நிதியை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தும் வசதியை தமிழக முன்னாள் படைவீரர் நலத்துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது; இது, பயனளிப்பதாக உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு, திருப்பூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை கொடி நாள் வசூல் கடந்த, 2022 - 2023ல், (7.12.2022 முதல், 6.12.2023 வரை) 1.19 கோடி ரூபாய்; 2023-2024ல், (7.12.2023 முதல், 6.12.2024 வரை) 1.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.