/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதருக்குள் மறைந்தது கால்வாய்! கோழிக்குட்டையில் வேதனை
/
புதருக்குள் மறைந்தது கால்வாய்! கோழிக்குட்டையில் வேதனை
புதருக்குள் மறைந்தது கால்வாய்! கோழிக்குட்டையில் வேதனை
புதருக்குள் மறைந்தது கால்வாய்! கோழிக்குட்டையில் வேதனை
ADDED : ஆக 05, 2025 11:34 PM

உடுமலை; உடுமலை அருகே, பாசன காலம் துவங்கியும், கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால், 600 ஏக்கர் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஜூலை 27ல், தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்புக்கு முன், பாசன பகுதியில், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் முறையாக துார்வாரப்படவில்லை; நிதி ஒதுக்கீடும் இல்லாததால், பாசன சபையினரும் பணிகளை மேற்கொள்ள திணறினர்.
கோமங்கலம் கிளை கால்வாயில் இருந்து, கோழிக்குட்டை கிராமத்திலுள்ள, 600 ஏக்கர் பரப்புக்கு, செங்காட்டு கால்வாய் என்ற பகிர்மான கால்வாயில் தண்ணீர் வினியோகிக்கப்படும். இந்தாண்டு பாசன சீசன் துவங்கும் முன் கால்வாயை துார்வார வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால்வாய் இருப்பதே தெரியாத அளவுக்கு புதர் மண்டி, மண் மேடாக மாறி விட்டது. பாசன காலம் துவங்கியும், விளைநிலங்களுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. முதல் சுற்று தண்ணீரில், மக்காச்சோளம் நடவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை திட்டமிட்டிருந்த விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பகிர்மான கால்வாயை துார்வார நிதி இல்லை என அனைத்து தரப்பிலும் தெரிவித்து விட்டனர். முன்னதாகவே தெரிவித்து இருந்தால், விவசாயிகளே துார்வாரும் பணிகளை செய்திருக்கலாம். தற்போது பாசன காலம் துவங்கி விட்டதால், ஒரு சுற்று தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.