/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தானமாக வழங்கப்பட்ட இடத்தில் 'முதல்வர் படைப்பகம்': விதிமீறலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகம் 'அடம்'
/
தானமாக வழங்கப்பட்ட இடத்தில் 'முதல்வர் படைப்பகம்': விதிமீறலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகம் 'அடம்'
தானமாக வழங்கப்பட்ட இடத்தில் 'முதல்வர் படைப்பகம்': விதிமீறலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகம் 'அடம்'
தானமாக வழங்கப்பட்ட இடத்தில் 'முதல்வர் படைப்பகம்': விதிமீறலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகம் 'அடம்'
ADDED : நவ 28, 2025 05:37 AM

திருப்பூர்: கால்நடை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில், 'முதல்வர் படைப்பகம்' அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிப்பதால், கால்நடை வளர்ப்போர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. கடந்த, 1926ல், விட்டல் தாஸ் சேட் என்பவர், கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு, தனது 1.96 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இதனை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெறும் வகையில், கால்நடை ஆலோசனை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தும் வகையில், கால்நடை மருத்துவமனை உருவாக்கப்பட்டு, தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் ஒரு பகுதியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, பசுமை நிறைந்த மரத்தையும் வெட்டி சாய்த்தனர். குறிப்பாக, கால்நடை பராமரிப்புதுறைக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில், அந்த பணியை தவிர, வேறு பணிகளுக்கு ஒதுக்க கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில், இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கூறி, பணிகளை துவக்கியுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியே, மக்களுக்காக தானமாக வழங்கிய இடத்தை தற்போது ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் பணியில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி விதிமீறல்
கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:
'விட்டல் தாஸ் சேட்' என்பவர், கால்நடை மருத்துவமனைக்காக தனது நிலத்தை தானமாக வழங்கினார். இந்த இடத்தை வேறு எந்த பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் விதிமீறலில் ஈடுபட்டு கட்டடம் கட்ட உள்ளனர். இதுகுறித்து கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி விட்டோம்.
அதனால், மூல பத்திரத்தை தேடும் பணி நடப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த, 15 ஆண்டுக்கு முன், எம்.எல்.ஏ. அலுவலகம் கட்ட திட்டமிட்டு, கடைசியில் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை, அரசு மருத்துவமனைக்கு கட்டடம் என அதிகாரிகள் முயற்சித்தனர்.
இதுகுறித்து முழுமையாக தெரியப்படுத்திய பின், அதிகாரிகள் பின்வாங்கிய கதையும் உண்டு. ஆனால், இம்முறை, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று கூறி, 'முதல்வர் படைப்பகம்' கட்ட, பழமையான மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். கலெக்டர் உடனடியாக விசாரித்து, வேறு இடத்தில் 'முதல்வர் படைப்பகத்தை' அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேயர் மழுப்பல் பதில்
--------------------
இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டதற்கு, ''அறிவு சார் நுாலகம் என்ற பெயரில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட உள்ளது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது,'' என்றார்.
'தானமாக வழங்கப்பட்ட இடத்தில், மாற்று பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்ற ஆர்டர் உள்ளதாக கேள்வி எழுப்பிய போது, ''இதற்கான முடிவு மாநகராட்சி கமிஷனர் செய்தது. இந்த இடம் தொடர்பாக முழுமையாக தெரிந்து விட்டு, சொல்கிறேன்,'' என, மழுப்பலாக பதில் கூறினார்.

