/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியை தேடி மாநகராட்சி நிர்வாகம்; விஸ்வரூபம் எடுத்து வரும் குப்பை விவகாரம்
/
பாறைக்குழியை தேடி மாநகராட்சி நிர்வாகம்; விஸ்வரூபம் எடுத்து வரும் குப்பை விவகாரம்
பாறைக்குழியை தேடி மாநகராட்சி நிர்வாகம்; விஸ்வரூபம் எடுத்து வரும் குப்பை விவகாரம்
பாறைக்குழியை தேடி மாநகராட்சி நிர்வாகம்; விஸ்வரூபம் எடுத்து வரும் குப்பை விவகாரம்
ADDED : மே 30, 2025 04:07 AM

திருப்பூர்: குப்பை அகற்றும் பிரச்னை, மக்கள் இயக்கமாக மாறி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் 'உறக்கம்' தெளிய துவங்கியுள்ளன; குப்பை கொட்ட பாறைக்குழியை மட்டும் தேடி அலையும் மாநகராட்சி நிர்வாகம், அறிவியல் பூர்வமாக குப்பை மேலாண்மையில் கவனம் செலுத்த தயங்குவது வியப்பளிப்பதாக, திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
'திருப்பூர் மாநகராட்சியில், தினசரி, 800 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது' என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. இதில், மிக குறைந்த அளவு குப்பை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டாலும், பெருமளவு குப்பை திறந்த வெளியில் தான் கொட்டப்படுகிறது. மாநகராட்சிக்கென, பிரத்யேக குப்பை கொட்டும் இடம் இல்லாததால், ஆங்காங்கே உள்ள அரசு மற்றும் தனியார் பாறைக் குழிகளை தேடி பிடித்து, அதில் தான் குப்பைகொட்டி நிரப்பி வருகின்றன.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மக்களை ஒரு வழியாக 'சமாதானப்படுத்தி' குப்பை கொட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்தது. இந்நிலையில், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் உள்ள இரு பாறைக்குழிகளில், மாநகராட்சி நிர்வாகம் கடந்த, 3 மாதங்களாக குப்பைக் கொட்டி வருகிறது. இதனால், 'நிலத்தடி நீர் பாதிக்கும்; துர்நாற்றத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்' என, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
அப்பகுதியில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து, காளம்பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு என்ற அமைப்பே ஏற்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக, நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக் குழியில் குப்பைக் கொட்டப்பட்டது; இதற்கும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கட்சிகளுக்கு 'நெருக்கடி'
குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் கோரிக்கையை முன்னெடுத்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வாய்த்திறக்காமல் இருப்பது ஏனோ என்ற கேள்வி மக்கள் எழுந்துள்ளது; ஓட்டு வங்கியை மட்டும் கவனத்தில் கொள்ளும் கட்சிகள், மக்கள் மற்றும் நகரின் நலன் மீது அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது என்ற விமர்சனத்தையும் முன்வைக்க துவங்கினர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கட்சியினருக்கு, இது நெருக்கடியை ஏற்படுத்த துவங்கிய நிலையில், கம்யூ., கட்சிகள், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி, 'மாநகராட்சி நிர்வாகம் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்த துவங்கியுள்ளன.
கடந்த இரு முறை எம்.பி.,யாக இருக்கும் சுப்பராயன், குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்வரின் கவனத்துக்கு கடிதம் வாயிலாக கொண்டு சென்றுள்ளார்; அந்தளவுக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
---
குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் கோரிக்கையை முன்னெடுத்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய ஆளும் கூட்டணி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் வாய்த்திறக்காமல் இருப்பது ஏனோ என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது