/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீரின்றி விளைநிலங்களில் வாடும் பயிர்... வெந்து தணிகிறது!விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்
/
தண்ணீரின்றி விளைநிலங்களில் வாடும் பயிர்... வெந்து தணிகிறது!விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்
தண்ணீரின்றி விளைநிலங்களில் வாடும் பயிர்... வெந்து தணிகிறது!விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்
தண்ணீரின்றி விளைநிலங்களில் வாடும் பயிர்... வெந்து தணிகிறது!விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்
ADDED : மார் 01, 2024 12:20 AM

உடுமலை;பருவமழை போதியளவு பெய்யாமல், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, வறட்சி துவங்கியுள்ளதால், நீண்ட கால பயிர்களை காப்பாற்ற, தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசன சாகுபடி, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து, நீண்ட கால பயிராக தென்னை மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைப்பொழிவு குறைவு
கிணறு மற்றும் போர்வெல்களுக்கு, பருவமழை காலத்தில், கிடைக்கும் நீர் வரத்தே ஆதாரமாக உள்ளது. மேலும், பி.ஏ.பி., பாசன காலத்தில், குளங்களில் நிரப்பும் நீரும் உதவுகிறது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கும், இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, கிணறு, போர்வெல்களை ஆழப்படுத்தியும், தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை.
முன்னதாகவே துவங்கியகோடை வெப்பம் கொளுத்துவதுடன், வறட்சியான காற்றும் வீசுவதால், விளைநிலங்களில், ஈரப்பதம் விரைவாக குறைந்து விடுகிறது. தற்போது, தண்ணீரை தேடி, கிராமம்... கிராமமாக தங்கள் பயணத்தை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உள்ள பகுதிகளில், நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளை அணுகி, தண்ணீரை விலைக்கு தருமாறு கேட்டு வருகின்றனர்.
இதற்கென உழவு மற்றும் இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்த டிராக்டர்களில், தண்ணீர் எடுத்துச்செல்வதற்கான 'டேங்கு'களை விவசாயிகள் பொருத்தியுள்ளனர்.
அதில், விலைக்கு தண்ணீரை வாங்கி வந்து, கிணறுகளில், விட்டு, தென்னை மரத்துக்கு பாய்ச்சி வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வறட்சியால் அதிகளவு தென்னை மரங்கள் பாதிக்கத்துவங்கியுள்ளன.
ஆயிரம் அடி வரை போர்வேல் அமைத்தாலும், தண்ணீர் கிடைக்கவில்லை. மாவட்டத்தில், ஏற்கனவே விவசாய தேவைக்காக, 1.5 லட்சத்துக்கும் அதிகமான போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு சார்பில், மாவட்டங்களில், நிலத்தடி நீரை ஆய்வு செய்ய, கிணறுகள் தேர்வு செய்யப்பட்டு, மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த டிச., மாதத்திலிருந்தே நிலத்தடி நீர்மட்டம் சரியத்துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தேவை எவ்வளவு?
தென்னை சாகுபடியில், மாநிலத்தின் மேற்கு மண்டல பகுதியிலுள்ள விளைநிலங்களில், நல்ல மகசூல் பெற, நாளொன்றுக்கு ஒரு மரத்துக்கு, 65 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தட்டுப்பாடு இருந்தாலும், ஒரு மரத்துக்கு, 22 லிட்டர் தண்ணீர் தேவை என வேளாண் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தற்போதுள்ள நிலையில், மரங்களுக்கு இந்தளவு தண்ணீர் பாய்ச்சுவது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனால், மூடாக்கு அமைத்தல் போன்ற வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். கோடை மழையும் கைவிட்டால், பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை காப்பாற்றுவது கேள்விக்குறியாகி விடும்.
நிலத்தடி நீர்மட்டம் சரிவால் காய்கறி சாகுபடி பரப்பும் பாதியாக குறையும் நிலை உள்ளது. நீர் நிர்வாகம் குறித்து வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாயிகளிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

