/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் தள்ளிய கொடூர கணவன்; ஒரு வாரத்துக்கு பின் மனைவி மீட்பு
/
கிணற்றில் தள்ளிய கொடூர கணவன்; ஒரு வாரத்துக்கு பின் மனைவி மீட்பு
கிணற்றில் தள்ளிய கொடூர கணவன்; ஒரு வாரத்துக்கு பின் மனைவி மீட்பு
கிணற்றில் தள்ளிய கொடூர கணவன்; ஒரு வாரத்துக்கு பின் மனைவி மீட்பு
ADDED : அக் 11, 2024 04:15 AM

திருப்பூர் : காங்கயத்தில், மனைவியை கிணற்றுக்குள் கணவர் தள்ளி விட்டு தப்பி சென்றார்; காயத்துடன் ஒரு வாரமாக கிணற்றுக்குள் இருந்த பெண்ணை மீட்டனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அபிபுல்லா கான், 33. இவரது மனைவி சைனாகான், 30. தம்பதியரின் இரு குழந்தைகள் ஊரில் உள்ளனர். ஒரு குழந்தையுடன் தம்பதியர் திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் தங்கி, தேங்காய் களத்தில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி சிக்கரசம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அருகில் இருந்த, 50 அடி கிணற்றில் மனைவியை அபிபுல்லா கான் தள்ளி விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லை; முகம், கை, கால்களில் சைனாகானுக்கு அடிபட்டது. தொடர்ந்து, கல் ஒன்றை எடுத்து, கிணற்றுக்குள் விழுந்த மனைவி மீது கணவர் போட்டார். பின், அங்கிருந்து கிளம்பிய அவர், குழந்தையுடன் தலைமறைவானார்.
கடந்த 5ம் தேதி வரை என, ஒரு வாரமாக கிணற்றுக்குள்ள காயத்துடன் அவர் இருந்தார். சில நாட்களாக பெய்த மழையில் கிணற்றுக்குள் தண்ணீர் உள்ளதா என்று அறிய தோட்ட உரிமையாளர் எட்டி பார்த்தபோது, கிணற்றுக்குள் பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காங்கயம் தீயணைப்பு வீரர்கள் பெண்ணை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் அபிபுல்லா கானை நேற்று கைது செய்தனர்.