ADDED : அக் 24, 2026 05:59 PM

திருப்பூர்: பத்தொன்பது ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி; அணைப்பாளையம் பாலம் இன்று (அக்.,24) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
- திருப்பூர் – மங்கலம் ரோட்டையும், காலேஜ் ரோட்டையும் இணைக்க ரயில்பாதை மற்றும் நொய்யல் ஆற்றின் குறுக்கே 670 மீட்டர் நீளத்தில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. கோர்ட் வழக்குகள், நில பிரச்னைகள் என 19 ஆண்டுகளாக இழுத்தடித்த பணி, இப்போது சமரசம் செய்யப்பட்டு முடிந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் சாலை உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சாலைகள் திட்டத்தில் 42.76 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
காலேஜ் ரோட்டில் இருந்து ரயில்வே வளைவுப்பாலம் வழியாக செல்லும் ரோட்டுக்கு மாற்றாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வேலம்பாளையம் ரோடு, ரங்கநாதபுரத்தில் இருந்து ரயில்பாதை மற்றும் நொய்யலை கடந்து, மங்கலம் – - திருப்பூர் ரோடு ரிங் ரோட்டில் இறங்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் நொய்யல் பாலம் இணையும் பகுதியில் அணைப்பாளையம் ரோட்டை இணைக்கும் ரவுண்டானா பணி மட்டும் பாக்கி உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி இன்று பாலம் திறக்கப்பட்டது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், சத்தியபாமா முன்னிலையில் அமைச்சர் அருண்ராஜ் பாலத்தை திறந்து வைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ. சத்தியபாமா ஹெல்மெட் அணிந்தபடி புதிய பாலத்தில் டூவீலரில் சென்று வந்தார்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம், டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் வத்சலா வித்யானந்தி, கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர்கள் கவிதா, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16 கூடுதல் வகுப்பறைகள்
பூலுவபட்டி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் பொதுப்பணித்துறையின் நபார்டு திட்டத்தில் 1.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இன்று நடந்த விழாவில் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் அமைச்சர் அருண்ராஜ் புதிய வகுப்பறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
அணைப்பாளையம் பாலம் இன்று திறக்கப்பட்டது. அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து, வாகனப்போக்குவரத்தை துவக்கிவைத்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், சத்யபாமா, மேயர்(பொறுப்பு) பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர்.
