ADDED : அக் 02, 2025 11:35 PM

திருப்பூர்:ராயபுரம் பொதுக்கழிப்பிடத்தில் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கூட பொருத்தப்படவில்லை. லட்சக்கணக்கில் செலவிட்டு செய்த பராமரிப்பு பணியில் குறைபாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பிடம் 36வது வார்டு ராயபுரம் பகுதியில் உள்ளது. இதை அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன.
நீண்ட நாள் முன் கட்டப்பட்ட இந்த கழிப்பிடம் பழுதானது. இதையடுத்து மாநகராட்சி சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி இங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் 2 லட்சம் ரூபாய் செலவில் இந்த பொதுக்கழிப்பிடம் சீரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் கழிப்பறைகளின் கதவுகளில் தாழ்ப்பாள் கூட பொருத்தப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கழிப்பறையின் உள்ளே சென்றால் கதவை தாழ் கூட போட முடியாது. ஒரு கையில் கதவை அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது' என்றனர்.
வார்டு கவுன்சிலர் திவாகரன் கூறுகையில், ''பொதுக்கழிப்பிடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் இங்கும் பணி செய்தனர்.
இந்த புகார் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய பொறியியல் பிரிவினரிடம் தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.