ADDED : மார் 19, 2024 10:50 PM
உடுமலை;கால்நடைகளை வாங்கும் வியாபாரிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உண்டான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
இதனால், கால்நடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வியாபாரிகள் சந்தைக்கு ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் பெரும்பாலும் ரொக்கமாகவே கொடுக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பால், இனிமேல் இவ்வாறு செய்வது சாத்தியமற்றது.
முன்பெல்லாம் சந்தைக்கு வரும் போது, உடன் வரும் தொழிலாளர், நண்பர்களிடம் பணத்தை பகிர்ந்து எடுத்து வருவது, வைக்கோல் கட்டுகள், மாட்டுத்தாழி உள்ளிட்டவற்றில் பணத்தை மறைத்து எடுத்து வருவது என பயந்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில், தற்போது பணப்பிரச்னையில் இருந்து தப்ப டிஜிட்டலுக்கு மாறத்துவங்கியுள்ளனர். கால்நடைகளை வாங்கும் வியாபாரிகள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், வரும் நாட்களில் பணம் கொடுத்து வியாபாரம் செய்வது பெருமளவு குறைந்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

