/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்தீ தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை: வறட்சியால் திணறும் வனத்துறை
/
வனத்தீ தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை: வறட்சியால் திணறும் வனத்துறை
வனத்தீ தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை: வறட்சியால் திணறும் வனத்துறை
வனத்தீ தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை: வறட்சியால் திணறும் வனத்துறை
ADDED : மார் 02, 2024 11:35 PM
உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், கடும் வறட்சி நிலவுவதால், உடனடியாக தீ தடுப்பு கோடுகள், தீ தடுப்பு காவலர்களை நியமிக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.
ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய உயிர்ச் சூழல் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் உள்ளன.
ஆண்டு தோறும், கோடை காலங்களில், வனத்தீ தடுக்கவும்,விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில், மலைவாழ் மக்களை கொண்டு, உடுமலை-மூணாறு ரோட்டில், இரு புறமும் தலா, 13 கி.மீ.,துாரம் மற்றும் வால்பாறை, கேரளா மாநிலம் சின்னாறு வனப்பகுதி எல்லை, மஞ்சம்பட்டி எல்லை மற்றும் தீ விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகள் என, 250 கி.மீ., துாரம் வரை தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப, தலா 3 மீட்டர், ஆறு மீட்டர், 12 மீட்டர் என்ற அகலத்தில், புதர்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு, தீ பரவுவதை தடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி, மலைவாழ் மக்களை கொண்டு, டிச.,மாதத்திலேயே துவங்கும். மேலும், வறட்சி நிலை, தீ விபத்து அபாயம், பரப்பளவு அடிப்படையில், வனச்சரகத்திற்கு ஏற்ப, மலைவாழ் மக்களில் அனுபவம் வாய்ந்த 20 இளைஞர்கள் நியமிக்கப்படுவர்.
நடப்பாண்டு, கடந்த சில மாதமாக, மலைப்பகுதிகளில் மழையின்றி,கடும் வறட்சி நிலை காணப்படுவதோடு, புற்கள், மரம், செடிகள் காய்ந்தும், வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.தீ விபத்து ஏற்பட்டால், பல கி.மீ., துாரம் காடுகள் அழிந்து,வனம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வனத்தீ தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில், உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வனத்துறையினர் கூறுகையில், 'தீ தடுப்பு கோடுகள் அமைக்கவும், தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கவும், ஆண்டு தோறும் நிதி ஒதுக்கப்படும். நடப்பாண்டு, இது வரை நிதி கிடைக்கவில்லை.
வனத்தீ தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்,'என்றனர்.

