/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை விவசாய மகிமை: உணர்த்திய விவசாயிகள்
/
இயற்கை விவசாய மகிமை: உணர்த்திய விவசாயிகள்
ADDED : பிப் 04, 2025 07:36 AM

பல்லடம்; இயற்கை விவசாய செய்முறைகளைக் காட்டியதோடு, ஆரோக்கியமான காய்கறிகள், உணவுப்பொருட்களை சமூகத்துக்கு வழங்குவதுதான் தங்கள் நோக்கம் எனக் கூறி, பல்லடம் அருகே நடந்த சந்திப்பில், இயற்கை விவசாயிகள், பொதுமக்களை வியக்கச் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து, சிவன் இயற்கை சந்தை என்ற பெயரில், பல்லடம் -- செட்டிபாளையம் ரோட்டில், கடை அமைத்து, காய்கறிகள், தானியங்களை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கருடமுத்துார் இயற்கை விவசாயி பொன்முத்து தோட்டத்தில், விவசாயிகள்- - பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இயற்கை விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உற்பத்தி செய்து வழங்கும் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, ஏதாவது ஒரு வகையில், நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
இன்றைய சூழலில், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயமே இல்லை என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இயற்கை விவசாயத்தாலும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்துடன், நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அடுத்த தலைமுறை, நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமானதாக இருக்க செய்வது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. இன்று, பல்வேறு போலி விளம்பரங்களால், ஆபத்தான உணவு பொருட்கள், சமுதாயத்தை சீரழித்து வருகின்றன.
இவற்றிலிருந்து, நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவரவர் கையில் தான் உள்ளது. இயற்கை காய்கறிகள் மீது பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
நம் முன்னோர் பயன்படுத்தி வந்த எண்ணற்ற காய்கறிகள் காலப்போக்கில் காணாமலேயே போய்விட்டன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். சமுதாயத்துக்கு சத்தான உணவுப் பொருட்களை வழங்குகின்றோம் என்ற மனதிருப்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இயற்கை விவசாய செய்முறைகள் குறித்து, விவசாயிகளிடம் பொதுமக்கள் கேட்டறிந்தனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள், தாங்கள் இயற்கை விவசாய மகிமையை உணர்ந்ததாக கூறினர்.
அங்குள்ள விளைநிலத்திலேயே விளைந்த இயற்கை காய்கறிகள், உணவுப் பொருட்களை பயன்படுத்தி மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.