/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'100 சதவீதம் ஓட்டுப்பதிவே இலக்கு'
/
'100 சதவீதம் ஓட்டுப்பதிவே இலக்கு'
ADDED : ஏப் 16, 2025 10:48 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளுடன் நேற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் முன்னிலை வகித்தார்.
'சக் ஷம்' அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பின் நிர்வாகி லலித்மோடி, மகாதேவன் உட்பட, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துகளை பதிவு செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் என வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது குறித்து, ஊரகப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடி மையத்துக்கு ஒரு சக்கரநாற்காலி என்று வைக்காமல், ஒவ்வொரு சாவடிக்கும் சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் வசதி செய்ய வேண்டும்.
உதவியாளருக்கு, சக்கர நாற்காலியை கையாள பயிற்சியும் அளிக்க வேண்டும். 'படிவம் -8' மூலம், மாற்றுத்திறனாளி வாக்காளர் என்று பதிவு செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் நாளில், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, சரியான வாகனவசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேசியதாவது:
எந்த தேர்தலாக இருந்தாலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தேவையான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், படிவம் -8 ல் விண்ணப்பித்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.தகுதியான மாற்றுத்திறனாளிகளை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; இடம் மாறி வந்தவர்கள் பெயர்களையும் சரியான விவரங்களுடன் பட்டியலில் சேர்க்க வேண்டும். நல சங்கங்கள், 18 வயது பூர்த்தியானவர்களை, வாக்காளர்கள் பட்டியலில் இணைக்க உதவ வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பட்டியல் எங்களிடம் இருப்பதால், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வரும் போது, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வாகன வசதி தேவையா என்ற விவரத்தையும் பதிவு செய்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினரின் கோரிக்கைகள், மாவட்ட தேர்தல் அலுவலர் வாயிலாக, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
---
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஓட்டுச்சாவடி வசதி குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன.