/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'காவலர் - உங்கள் நண்பன்' பேச்சல்ல... இனி செயலிலும்!
/
'காவலர் - உங்கள் நண்பன்' பேச்சல்ல... இனி செயலிலும்!
'காவலர் - உங்கள் நண்பன்' பேச்சல்ல... இனி செயலிலும்!
'காவலர் - உங்கள் நண்பன்' பேச்சல்ல... இனி செயலிலும்!
ADDED : அக் 21, 2024 04:18 AM

'திருடன் - போலீஸ்'விளையாடும்போது, சிறுவர்களிடையே 'போலீஸ்' ஆகத்தான் கடும்போட்டி இருக்கும். அதே சிறுவர்கள் கூட, ''போலீசு வர்றாங்க...'' என்று குரல் கொடுத்தால் தலைதெறிக்க ஓடிவிடுவதுண்டு.
காவலர்கள் நம் சேவையாளர்கள் என்ற எண்ணத்தைக் காட்டிலும், மக்களிடையே இழையோடியுள்ள அச்ச உணர்வு, நேர்மறை எண்ணங்களைக் காட்டிலும், எதிர்மறை எண்ணங்களை சிறுவர் மனங்களில் கூட விதைத்திருக்கின்றன.
அர்ப்பணிப்புணர்வுடன் காவலர்கள் சேவைபுரியும்போது, அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பது உறுதி என்பதை, திருப்பூர் மாநகரக் காவலர்கள் தற்போது நிரூபித்து வருகின்றனர். இதற்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது, காவல் ஆணையர் லட்சுமி தலைமையில் அமலாகியுள்ள 'டெடிகேட்டட் பீட்' திட்டம்.
கே.வி.ஆர்., நகர் பகுதியில் வீடிழந்து, மரத்தடியில் வசித்துவந்த அமுதாவுக்கு, தலைமைக்காவலர் பிரசாந்த், 'தகர ெஷட்'டில் ஒரு தற்காலிக வீட்டை உருவாக்கிக்கொடுத்திருக்கிறார். சேவை எண்ணம் மனதில் எழுந்தால், பதவியோ, பணமோ கூட முக்கியமில்லை.
''என் சொந்த ஊர் வத்தலக்குண்டு; என் தந்தை எஸ்.ஐ.,யாக இருந்தவர். காவல்துறையில் பணிக்குச் சேர்ந்ததே மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது 'டெடிகேட்டட் பீட்' திட்டம். பணியில் சேர்ந்த புதிதில், மலைவாழ் மக்களுக்கான சேவைபுரியும் வாய்ப்பை எஸ்.பி.,யாக இருந்த சரவணசுந்தர் (இப்போது டி.ஐ.ஜி.,) வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது பெரும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
'காவலர் உங்கள் நண்பன் என்று காவலர்களே சொல்லிக்கொள்ளக்கூடாது; பொதுமக்கள் அவ்வாறு கூறும் வகையில் காவலர் செயல்பாடு இருக்க வேண்டும்' என்று மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.
இதைச் சிரமேற்கொண்டு பணிபுரிகிறேன். கே.வி.ஆர்., நகர் பகுதியில் மாற்றுத்திறனாளி அமுதாவுக்கு, மூன்று நேரமும் உணவு வழங்க, ஒரு ஓட்டல் உரிமையாளர் சம்மதித்துள்ளார்'' என்று கூறுகிறார், பிரசாந்த்.
காவலர் மீதான நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. இது விருட்சமாக வேண்டுமானால், மக்களிடமும் தேவை மனமாற்றம்; காவலர்களுக்குத் தேவை அர்ப்பணிப்புணர்வுடனான சேவை.