/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரம் பேண மாநகராட்சிக்கு பாடம் எடுத்தது ஐகோர்ட்! அடுக்கடுக்காக வழிகாட்டுதல்கள்
/
சுகாதாரம் பேண மாநகராட்சிக்கு பாடம் எடுத்தது ஐகோர்ட்! அடுக்கடுக்காக வழிகாட்டுதல்கள்
சுகாதாரம் பேண மாநகராட்சிக்கு பாடம் எடுத்தது ஐகோர்ட்! அடுக்கடுக்காக வழிகாட்டுதல்கள்
சுகாதாரம் பேண மாநகராட்சிக்கு பாடம் எடுத்தது ஐகோர்ட்! அடுக்கடுக்காக வழிகாட்டுதல்கள்
UPDATED : அக் 18, 2025 05:31 AM
ADDED : அக் 18, 2025 12:07 AM

திருப்பூர்: தரம் பிரித்தல் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை, குப்பை விவகாரத்தில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு, ஐகோர்ட் வழங்கியுள்ளது.
திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள், பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தது. விவசாய அமைப்பினர், பொது நல அமைப்பினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து உருவான, 'திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு', 'முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்டும் செயல் நிறுத்தப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்தது. குப்பை மேலாண்மை தொடர்பாக ஐகோர்ட் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. அவை வருமாறு:
தரம் பிரித்தல் கட்டாயம்
* கைவிடப்பட்ட குவாரிகளில், தரம் பிரிக்கப்படாத கழிவுகள் கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். குப்பைத் தொட்டியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பரவுவதை தவிர்க்க, தடுப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.* குப்பை கொட்டப்பட்ட இடத்தில் இருந்து, காற்றில் துாசு மற்றும் நீர் வழி நோய் பரவுவதை தவிர்க்கவும், ஈ மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளில் இருந்து கிருமி பரவுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடக்கழிவு சேகரிக்க இடம்
* குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான பணி முடியும் வரை, திடக்கழிவுகளை சேமித்து வைக்க, பதப்படுத்த, மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள செயலாக்க மையங்கள், தற்காலிக இருப்பு யார்டுகளை பயன்படுத்த வேண்டும்.* அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் தற்காலிக ஒப்பந்தம் மேற்கொண்டு, குப்பை மேலாண்மை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்க வேண்டும்.
மழைநீர் கலக்கக்கூடாது
* கொட்டப்படும் குப்பை, கழிவுகளின் மீது மழைநீர் விழுவதை தவிர்ப்பதன் வாயிலாக, குப்பைக்கழிவில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவை குறைக்க முடியும்.* ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்க, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதை, மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
* கைவிடப்பட்ட குவாரிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை, கழிவில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக, சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வுக்கூட சோதனை அவசியம்
* மழைநீர் வடிகாலில், கழிவுநீர் கலப்பதை தவிர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குப்பை கொட்டப்படும் இடத்தின் தன்மையை அறிந்துகொள்ள, அவ்வப்போது அந்த இடத்தின் நிலத்தடி நீர் மற்றும் மண் மாதிரிகளை தொடர்ந்து சேகரித்து, ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தி, மதிப்பீடு செய்ய வேண்டும்.இவ்வாறு, ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.