/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரைப்புதுாரில் 'தரை' தட்டிய குப்பை 'மலை' அகற்ற எட்டு வாரம் அவகாசம் அளித்த ஐகோர்ட்
/
கரைப்புதுாரில் 'தரை' தட்டிய குப்பை 'மலை' அகற்ற எட்டு வாரம் அவகாசம் அளித்த ஐகோர்ட்
கரைப்புதுாரில் 'தரை' தட்டிய குப்பை 'மலை' அகற்ற எட்டு வாரம் அவகாசம் அளித்த ஐகோர்ட்
கரைப்புதுாரில் 'தரை' தட்டிய குப்பை 'மலை' அகற்ற எட்டு வாரம் அவகாசம் அளித்த ஐகோர்ட்
ADDED : மார் 07, 2024 04:05 AM

பல்லடம், கரைப்புதூரில், மலைபோல் குவிந்துள்ள குப்பை குவியலை, 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பல்லடம் ஒன்றியத்தில், பெரிய ஊராட்சியாக கரைப்புதுார் உள்ளது. சாய ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது.
தொழிலாளர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால், இதற்கு இணையாக சுகாதார சீர்கேடும் அதிக அளவில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, உப்பிலிபாளையம் - - கரைப்புதுார் செல்லும் ரோட்டில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் குப்பைகள், மீன், கோழி இறைச்சி கழிவுகள், அழுகிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, அவ்வப்போது குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் புகை கிளம்புவதும், நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறு, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் குப்பை குவியலை அகற்ற உத்தரவிட வலியுறுத்தி, பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர், 8 வாரத்துக்குள் குப்பை குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு தலைமைச் செயலர், திருப்பூர் கலெக்டர் உட்பட துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
நிரந்தர தீர்வு வேண்டும்!
அதிகளவு மக்கள் வசிக்கும், கரைப்புதுார் ஊராட்சியில், அதற்கேற்றவாறு கட்டமைப்பு வசதிகள் கிடையாது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிப்பதால், இதனை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கோர்ட் உத்தரவை பின்பற்றி தற்போது குப்பை அகற்றப்பட்டாலும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் இதே பிரச்னை எழும். எனவே, ஊராட்சியை தரம் உயர்த்தவுடன், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.

