ADDED : ஜன 24, 2024 01:35 AM
- நமது நிருபர்கள் குழு -
ஏறத்தாழ, 500 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்த தருணம் அது. ஆம்... அயோத்தியில் ஸ்ரீராம பிரானுக்கு அழகிய கோவில் கட்டப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நம் தேசத்தின் புகழ்பாடும் அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் பெருமை குறித்து, திருப்பூர் பகுதியினர் கூறியதாவது:
சுற்றுலா மேம்படும்...
உலகில் உள்ள மக்கள் அனைவரும், தாங்கள் விரும்பும் கடவுளை வணங்குகின்றனர்; இறையருள் பெறுகின்றனர். மதம் கடந்து, மனித நேயம் நிறைந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே மதங்கள் சொல்லும் உண்மை. மத சகிப்பு தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வுடன் வாழ்வோர் இந்த கோட்பாடை பின்பற்றுகின்றனர்.
அந்த அடிப்படையில் தான், அயோத்தி ராமர் கோவிலையும் பார்க்கின்றனர். அயோத்தியை பொருத்தவரை, அன்னிய நாட்டவர் யாரும் அண்டி, வெற்றி கொள்ள முடியாத இடமாக, அடையாளமாக அந்த இடம் பார்க்கப்படுகிறது. அங்கு, ராமர் கோவில் கட்டப்பட்டதால், சுற்றுலா மேம்படும்; நேரடி, மறைமுகமாக அதிகம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.
- காதர் பாஷா, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர், திருமுருகன்பூண்டி
அற்புதமான தருணம்
இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. 500 ஆண்டுகளுக்கு பின், பல்வேறு போராட்டம், உயிர்த்தியாகம் போன்றவற்றை கடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தேசத்துக்கு மிகப்பெரிய பெருமை. அற்புதமான தருணம். தேசத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.
யாரையும் புண்படுத்தாமல் நடந்து முடிந்துள்ளது. இஸ்லாமியர் உள்ளிட்ட பலரும் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இஸ்லாமிய பெண் ஒருவர், பிறந்த குழந்தைக்கு ராம் ரஹீம் என்று பெயர் சூட்டியுள்ளார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வெளிகாட்டியுள்ளது. அரசியல்கட்சியினர் தவறாக புரிந்து இருக்கலாம். ஆனால், மக்கள் சரியாக புரிந்து கொண்டு, வரவேற்று உள்ளனர்.
- ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர்
இந்தியனாக கவுரவம்
ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு, வரலாற்று சிறப்பு மிக்க தருணம். மிகப்பெரிய இந்தியனாக கவுரவம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி விரதம் இருந்து, ஸ்ரீ ராமருக்கு தொடர்பான கோவில்களில் வழிபட்டு திறந்துள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டில் உள்ள முக்கியமான நபர்களை அழைத்து சிறப்பாக கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
- செந்தில்வேல்
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர்
மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் தேசத்துக்கு பெருமை சேர்க்கிறது. உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஆத்மாவுக்கு அர்ப்பணிப்பு. ஒட்டுமொத்த இந்திய மக்களும், மதங்களை கடந்து, ஒன்று சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்து, கோவில் திறப்பை வரவேற்று கொண்டாடிய அற்புதமான நிகழ்வு நடந்துள்ளது.
- கொங்கு ராமகிருஷ்ணன், அமைப்பாளர், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை.
மெய் சிலிர்க்க வைக்கிறது
ஸ்ரீ ராமர் வனவாசம் முடிந்து, அவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தது, ஒவ்வொரு ஹிந்துக்களும் ஆத்மார்த்தமாக உணருகின்றனர். இதை பார்த்து வயதான பலரும் ஆனந்த கண்ணீர் விட்டது மெய் சிலிர்க்க வைக்கிறது. முன், ராமர் வடநாட்டு கடவுள் என்ற பிரிவினையை உண்டாக்கினர். தற்போது, வடக்கு, தெற்கையும் இணைத்தாக உணர்கின்றனர். ஒவ்வொரு கோவில்களில், பஜனை, அன்னதானம், அகல்விளக்கு ஏற்றி என, பல வகையில் வரவேற்று கொண்டாடியுள்ளனர். ஸ்ரீ ராமபிரான் மீது மக்களுக்கு உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
---- மலர்க்கொடி மாநில செயலாளர், பா.ஜ.,
---
தேசத்தின் ஒற்றுமை
ராமர் கோவில் என்பது இந்த தேச மக்களின் 500 ஆண்டு கனவு. இந்த நாடு மதசார்பற்ற நாடு என்பதற்கான உதாரணமாக, இந்த நிலம் குறித்த பிரச்னை சுப்ரீம் கோர்ட் மூலம் சரிசமமான நீதி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து மதங்களும் சமம். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவே உள்ளனர். பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டு ராமர் கோவிலை அமைத்து திறந்து வைத்துள்ளார். தன் மீதான விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, உரிய வகையில் விரதம் முதல் புண்ணிய தீர்த்தம் சேகரித்தும் பிராண பிரதிஷ்டையை சிறப்பாகச் செய்துள்ளார். தேசத்தின் ஒற்றுமை, வளர்ச்சி, மக்கள் மத்தியில் அமைதி ஆகியன தொடர்ந்து மேம்படும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
- திருமுருக தினேஷ், மாநில இளைஞர் அணி தலைவர் யுவசேனா
---
மனிதப்பிறவி பூர்த்தியானது...
சிறப்பு அழைப்பின் பேரில், திருப்பூரில் இருந்து, ஆறு பேர் விழாவில் பங்கேற்றோம். எமது மனிதப்பிறவி பூர்த்தியாகியிருக்கிறது. மிகப்பிரமாண்டமாக நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் வரலாற்றில் பதிவாகும் மிகப்பெரிய ஆன்மிக விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சகாப்தத்தில் பங்கேற்க அழைப்பு வந்ததும், நாங்கள் பங்கேற்றதும், ஸ்ரீராமரின் அருட்கடாட்ஷம்.
- ராஜா சண்முகம், முன்னாள் தலைவர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
இந்தியாவின், 90 கோடி ஹிந்துக்களின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது. சிறுபான்மையின ஓட்டுக்காக செயல்படும் கட்சிகள் மத்தியில், ஹிந்து மக்களின் கோரிக்கையை பிரதமர் நிறைவேற்றியிருக்கிறார்; மக்களின் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் செய்த பின், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கான அந்தஸ்து உயர்ந்துள்ளது.
விவசாயிகள் அனைவரும், ஸ்ரீராமர் கோவிலை நினைத்து மகிழ்கிறோம். இந்தியா வல்லரசாக உயர, ஸ்ரீராமரும் அருள்புரிவார். அயோத்தி கோவிலின் பெருமைகளை ஒவ்வொரு இல்லத்துக்கும், ராம ராஜ்ஜியம்' என்ற பெயரில் கொண்டு சேர்த்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
- ஈஸ்வரன், மாவட்ட செயலாளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.

