/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் விவகாரம் தீவிரமாகிறது போராட்டம்
/
குப்பை கொட்டும் விவகாரம் தீவிரமாகிறது போராட்டம்
ADDED : டிச 27, 2024 11:34 PM

அனுப்பர்பாளையம், ; பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டபின்னும், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்டுவதாக எழுந்துள்ள பிரச்னை தீவிரமடைந்துள்ளது. நேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள், மாநகராட்சி சார்பில், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. ''குப்பையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்; சுகாதாரக்கேடு ஏற்படும்; பாறைக்குழியில் குப்பை கொட்ட அனுமதிக்கக்கூடாது'' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு மாநில செயலாளர் சதீஷ்குமார், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குப்பைகளை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மாநகராட்சி சார்பில், பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி சதீஷ்குமார், கடந்த 23ம் தேதி இரவு முதல் பொங்குபாளையம், பாபுஜி நகர் விநாயகர் கோவில் அருகில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் ஊராட்சி பகுதி பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

