sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மந்திரத்தில் 'மாங்காய்' காய்க்காது; சொத்து வரி விவகாரத்துக்கு தீர்வு; சீராய்வுக்குழு மூலமே சாத்தியம்

/

மந்திரத்தில் 'மாங்காய்' காய்க்காது; சொத்து வரி விவகாரத்துக்கு தீர்வு; சீராய்வுக்குழு மூலமே சாத்தியம்

மந்திரத்தில் 'மாங்காய்' காய்க்காது; சொத்து வரி விவகாரத்துக்கு தீர்வு; சீராய்வுக்குழு மூலமே சாத்தியம்

மந்திரத்தில் 'மாங்காய்' காய்க்காது; சொத்து வரி விவகாரத்துக்கு தீர்வு; சீராய்வுக்குழு மூலமே சாத்தியம்

1


ADDED : டிச 23, 2024 11:56 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி சொத்து வரி உயர்வு விவகாரம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓங்கி ஒலிக்கிறது. வாத - விவாதங்கள் முற்றுப்பெறவில்லை. தீர்வும் கைகூடவில்லை. போராட்டங்கள் கைகொடுக்கவில்லையா... அவற்றைப் பொருட்படுத்தவில்லையா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. ''தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட வரி என்று கூறுகிறார் மேயர்; தனிப்பட்ட மேயராக திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டும் எப்படி வரியை குறைத்து நல்ல தீர்வு காண முடியும்? இது, 'மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது' போன்றது'' என்ற கருத்தையும் அரசியல் கட்சியினர் முன்வைக்கின்றனர்.

''அரசியல் கட்சியினர், தொழில்துறையினர், தொழிற்சங்கத்தினர் அடங்கிய குழுவை உருவாக்கி, வரி சீராய்வு செய்ய, மாநகராட்சி நிர்வாகம் முன்வரலாமே'' என்ற கருத்து தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வுக்கு, அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளோடு, தி.மு.க., கூட்டணியிலுள்ள இ.கம்யூ., - மா.கம்யூ., - காங்., - வி.சி.க., ஆகியனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு இந்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது. எம்.பி., சுப்பராயன்,'சொத்துவரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது; குறைக்க வேண்டும்' என, ஆதாரத்துடன் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க.,வைச் சேர்ந்த தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், சொத்துவரியை குறைக்க வேண்டுமென, அமைச்சர் நேருவை சந்தித்து முறையிட்டுள்ளார். 'அரசு விதிமுறைகளை மீறாமலும், நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும்,' என்று மேயர் தினேஷ்குமார் உறுதி அளித்துள்ளார். சொத்து வரி உயர்வை எதிர்க்கும் கட்சிகளின் நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்தவை:

மறுசீராய்வு அவசியம்


குணசேகரன் (அ.தி.மு.க.,)

முன்னாள் எம்.எல்.ஏ.,

சொத்துவரியை குறைக்க வேண்டுமென, தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், அமைச்சரிடம் முறையிட்டுள்ளதே, அபரிமிதமான வரி உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், குப்பை வரி விதித்த போது, ஸ்டாலின் எதிர்த்தார். அதை நிறுத்தி வைத்தோம். மத்திய அரசு கூறியும், நாங்கள் வரியை உயர்த்தவில்லை. தற்போது, மத்திய அரசு வற்புறுத்தலால் உயர்த்தினோம் என்று மேயர் கூறுவதை ஏற்க முடியாது. கோவை மாநகராட்சியை விட திருப்பூரில் வரி உயர்வு அதிகம். மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் முயற்சியுடன், செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வரிகளையும் மறுசீராய்வு செய்ய வேண்டும்.

பறிபோகும் அதிகாரம்


ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர், இ.கம்யூ.,

கடந்த 2022ல், 25 முதல் 100 சதவீதம் வரியை உயர்த்தி, வரி சீராய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தோம். ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வையும், குப்பை வரியாக, 7 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு வரி விதிப்பதையும் எதிர்த்தோம். தமிழக அரசு கூறியதாக கூறி, ஆண்டுக்கு 6 சதவீதம் வரியை உயர்த்தினால், உள்ளாட்சிகளின் அதிகாரம் என்னாவது? மேயர் சொல்வதை முழுமையாக ஏற்கமுடியாது. மும்முனை மின் இணைப்பு விவரங்களை பெற்று, மறு அளவீடு செய்து, வரி உயர்வு செய்யும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. கடையின் வரி, ஆறு மாதங்களுக்கு, 1,770 ரூபாயாக இருந்தது; 60 ஆயிரமாக உயர்த்தியதை எப்படி நியாயம் என்று கூறமுடியும். அரசியல் கட்சியினர், தொழில்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து, கலந்து பேசி, கருத்துக்கேட்டு, வரி சீராய்வு செய்யப்பட வேண்டும்.

ஏற்கவே முடியாது


முத்துக்கண்ணன், மாவட்ட செயலாளர், மா.கம்யூ.,:

மாநகராட்சி நிர்வாகம், கடன் அதிகமாகிவிட்டது என்று ஆயிரம் காரணம் கூறினாலும், அபரிமிதமான வரி உயர்வை ஏற்க முடியாது. அத்தியாவசிய செலவு, ஆடம்பர செலவு என கண்டறிந்து, தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். வீட்டை விற்று, வரி செலுத்தும் அளவுக்கு வரியை உயர்த்தக்கூடாது. வரியை, 100 சதவீதம் உயர்த்தியதே தவறு, அதற்கு பிறகு, ஆண்டுக்கு 6 சதவீத உயர்வை ஏற்கமுடியாது. உள்ளாட்சி நிர்வாகத்தில், மாநில அரசு தலையிட்டு வரி உயர்வை கட்டாயமாக்கக்கூடாது; அதை நிறைவேற்ற, மாமன்றம் கூடி ஒப்புதல் அளிப்பதும் தவறுதான். சென்னை, கோவையை காட்டிலும் திருப்பூர் மாநகராட்சியில் வரி அதிகம்; வரியை குறைக்க மேயர் நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். மக்களை பாதிக்காத வகையில் குறைக்க வேண்டும்; கண்துடைப்புக்கான வரி குறைப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது.

மேயரால் முடியுமா?


செந்தில்குமார் (காங்.,), மாநகராட்சி கவுன்சிலர்:

சென்னை, கோவையை காட்டிலும், திருப்பூரில் சொத்துவரி உயர்வு அதிகம் என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதை மாநகராட்சியும் இதுவரை மறுக்கவில்லை. தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட வரி என்று மேயர் கூறுவதால், தனிப்பட்ட மேயராக திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டும் எப்படி வரியை குறைத்து நல்ல தீர்வு காண முடியும்? இது, 'மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது' போன்றது. மேயர் ஒருவர் தனியாக முடிவு செய்து வரியை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை. தொழில் அமைப்புகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து பேசி, அதற்கு ஏற்ப வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்; ஏற்புடையதாகவும் இருக்கும்.

அரசு விருதுக்காகவா?


செந்தில்வேல், மாவட்ட தலைவர், பா.ஜ.,

சென்னை, கோவை மாநகராட்சியை காட்டிலும், திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு அதிகம். அதிகம் வரி உயர்த்தினால் விருது கிடைக்குமென உயர்த்தியிருக்கலாம். 2017ல் குப்பை வரி விதித்து, நிறுத்தி வைக்கப்பட்டது; ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, குப்பை வரியை செலுத்துமாறு கூறியதுடன், ஏழு ஆண்டுகளுக்கான அபராதமும் விதிப்பது எப்படி நியாயம்? சொத்துவரி உயர்வால், தொழில்துறையினர் உட்பட மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால்தான், வரியை குறைத்து நல்ல தீர்வு வழங்க உள்ளதாக மேயர் கூறியுள்ளார். முதலில் மாநகராட்சியின் ஆடம்பர செலவைக் குறைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us