/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேறும், சகதியுமாக மாறிய சந்தை வளாகம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
/
சேறும், சகதியுமாக மாறிய சந்தை வளாகம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
சேறும், சகதியுமாக மாறிய சந்தை வளாகம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
சேறும், சகதியுமாக மாறிய சந்தை வளாகம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ADDED : நவ 26, 2025 05:34 AM

உடுமலை: உடுமலை நகராட்சி சந்தையில், மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில் விளையும் தக்காளி, கத்தரி, தேங்காய், வெங்காயம், முருங்கை, பீட்ரூட், மிளகாய் என பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தினமும் சராசரியாக, 700 டன் காய்கறி வரத்து இருக்கும் நிலையில், கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங் களிலிருந்து வியாபாரிகள் வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.
அதே போல், நகராட்சி சந்தை வளாகத்தில், 400க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை கடைகளும், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சந்தையும் கூடி வருவதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
நகராட்சி சந்தை வளாகத்தில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மழை நீர் வடிகால், ரோடு உள்ளிட்ட வசதி களும் இல்லாததோடு, மழைக்காலங்களில், மழை நீர் தேங்கி சந்தை வளாகம், சேறும், சகதியுமாக மாறி வருகிறது.
பெரும்பாலும் தரைக்கடைகளில் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வரும் நிலையில், மண்ணில் தரமற்ற காய்கறிகள் விற்க வேண்டிய அவல நிலை உள்ளது. வாகனங்கள் உள்ளே சென்று வருவதால், ரோடு சேதமடைந்து, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுமக்கள் நடக்க கூட முடியாத அளவிற்கு, சந்தை வளாகம் 'நாறி' வருகிறது. மழை நீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக்கேடு ஏற்பட்டு வரும் நிலையில், சந்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
மேலும், சந்தையில் அழுகிய காய்கறிகள் முறையாக அகற்றப்படாமலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல், கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
சந்தை வளாகம் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுத்தி வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சந்தை வளாகத்தை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் வேண்டும்.

