/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனம் உருகி இறைவனை வழிபட வேண்டும்'
/
'மனம் உருகி இறைவனை வழிபட வேண்டும்'
ADDED : செப் 02, 2025 11:18 PM

திருப்பூர்; ''கோவிலில் மனம் உருகி இறைவனை வழிபடவேண்டும் என்பதை செய்துகாட்டியவர், மாணிக்கவாசக சுவாமிகள்,'' என ஆன்மிக சொற்பொழிவில், சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, திருப்பூர் யுனிவர்சல் ரோடு, ஹார்வி குமாரசாமி மண்டலத்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது.
நேற்றைய சொற்பொழிவில், மாணிக்கவாசகரின் வரலாற்றை கூறும் திருவாதவூரடிகள் புராணம் குறித்து, சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:
மாணிக்கவாசக சுவாமிகள், தில்லையில் சில காலம் தங்கி யிருந்து பெருமானை வழிபாடு செய்தார். உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்கள் கூட இமைக்காமல் கனகசபையில் நின்று இறைவனை வழிபட்டார்.
நாமெல்லாம் இறைவனை, மனம் உருகி வழிபட வேண்டும் என்பதை, அவர் செய்துகாட்டி இருக்கிறார். கீர்த்தி திரு அகவல், திரு அண்டப்பகுதி, போற்றித் திரு அகவல் ஆகியவற்றை பாடிக்கொண்டு வந்தார்.
இன்றைக்கும் அடியார்கள், பெருமான் திருவீதியுலா வரும்போது, கோவிலை பிரகாரமாக சுற்றிவரும்போது, இந்த அகவல்களையெல்லாம் பாடுவது மரபாக இருந்து வருகிறது. அதே தில்லையில்தான், குயில் பத்து, பொன்னுாசல், திருப்பொற் சுண்ணம் போன்ற பதிகங்களை பாடினார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற ஒரு சிவனடியார், பொன்னம்பலம், பொன்னம்பலம் என்று கூறியபடி இலங்கை முழுவதும் சுற்றினார். இதை கேட்ட அந்நாட்டு அரசரும், புத்த குருவும், புத்தரே கடவுள்; புத்தமதத்தை நிலை நிறுத்துவோம் என சபதமேற்று, தில்லைக்கு புறப்பட்டு வந்தனர்.
தில்லைவாழ் மக்களெல்லாம் மனம் வருந்தி பெருமானிடம் விண்ணப்பம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவர் கனவிலும் தோன்றிய பெருமான், மாணிக்கவாசகரை அழைத்து, மன்னருடன் வாதிடச் சொல்லுங்கள் என்றார். புத்த குருவுடன், மாணிக்கவாசகர் தர்க்கம் செய்தார்; அவரது தர்க்கத்தை, அந்த புத்தமத துறவியும் ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் சொற்பொழிவு ஆற்றினார்.