ADDED : செப் 23, 2024 12:32 AM

திருப்பூர் : தமிழக முதல்வரின் தனி பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு எழுதிய, 'போட்டித்தேர்வு -15ம் புதிது' என்ற புத்தகத்துக்கு, தமிழக முதல்வர் முன்னுரை எழுதி வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் வடக்கு ரோட்டரி சார்பில், மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளி நுாலகங்களுக்கு, டி.ஐ.ஜி., எழுதிய இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது. புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் ஆர்.வி., ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது.
ரோட்டரி தலைவர் செல்லதுரை, செயலாளர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் உன்னி வெங்கடேசன், மீனாட்சி சுந்தரம், சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு,தான் எழுதிய புத்தகங்களை, பள்ளி தலைமையாசியர்களுக்கு வழங்கி பேசியதாவது:
வாழ்வில் நேர்வழியில் செல்பவர்களுக்கு உயர்வு கிடைக்க சற்று தாமதம் ஆகும்; அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கும். குறுக்கு வழியில் செல்லும் போது உயர்வு சீக்கிரம் வரலாம், ஆனால் மகிழ்ச்சி கிடைக்காது. நேர்வழியில் சென்றால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வு நடக்கும் போதுமட்டும், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது; பிறகு மறந்து விடுகின்றனர். இதேபோல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற கனவும், தேர்வு நேரத்தில் மட்டும் வருகிறது; முன்கூட்டியே தயாராவதில்லை.
தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும், 15 வகையான சிந்தனைகள், இந்த புத்தகத்தில், 15 பண்புகளாக கொடுக்கப்பட்டுள்ளது. நேரம் என்பது அனைவருக்கும் இலவசம்; 'மொபைல்போன்' என்ற நேரக்கொல்லி அபகரிக்காமல், நேரத்தை மிகச்சரியாக செலவிட வேண்டும்.
கடைசி நேரத்தில், மன அழுத்தத்துடன் செயல்படாமல், முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். வழக்கமான பாடங்கள் என்ற நிலையில் இருந்து மாறி, பொது அறிவை வளர்த்துக்கொண்டால், போட்டித்தேர்வுகளில் வெற்றி எளிதாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.