/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி நிர்வாகம் கொண்டு சென்ற பணம் சிக்கியது
/
பள்ளி நிர்வாகம் கொண்டு சென்ற பணம் சிக்கியது
ADDED : மார் 20, 2024 12:09 AM

திருப்பூர்;திருப்பூரில், பள்ளி நிர்வாகம் சார்பில், உரிய ஆவணமின்றி அனுப்பிவைக்கப்பட்ட, 2.10 லட்சம் ரூபாய், வடக்கு தொகுதி பறக்கும்படையிடம் சிக்கியது.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்ல வாய்ப்பு உள்ளது.
அத்தகைய முறைகேடுகளை தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு, இரவு பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கவுண்டம்பாளையம் நால் ரோடு பகுதியில் நேற்று காலை, பிரம்மநாயகம் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில், விஜயமங்கலத்திலுள்ள பொறியியல் கல்லுாரிக்கு காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது.
உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட, 2 லட்சத்து 10 ஆயிரத்து, 310 ரூபாயை கைப்பற்றிய பறக்கும்படை குழுவினர், வடக்கு தாசில்தார் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
ரூ.3.81 லட்சம் பறிமுதல்
திருப்பூர் தெற்கு தொகுதியில், இருவேறு நபர்களிடம் இருந்து, மூன்று லட்சத்து, 81 ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு தொகுதியின் நிலை கண்காணிப்பு குழு, நேற்று முன்தினம் காங்கயம் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தது.
நாச்சிபாளையம் அருகே, உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட, மூன்று லட்சத்து, 6 ஆயிரத்து, 500 மற்றும் 74 ஆயிரத்து, 600 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் சரிபார்த்து, கருவூலத்தில் சேர்த்தனர்.
ரூ.75 ஆயிரம் பறிமுதல்
திருப்பூர் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, ரூ.75 ஆயிரம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோவில் வழியில் பறக்கும் படை அதிகாரி மணிவேல் முருகன் மற்றும் எஸ்.ஐ., ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த நபரிடம் சோதனை செய்தனர். மாடு வியாபாரியான ஈஸ்வரன், 66 என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த, 75 ஆயிரத்து, 200 ரூபாயை பறிமுதல் செய்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பல்லடத்திலும்...
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், தாராபுரம் நோக்கி சென்ற காரில் சோதனை மேற்கொண்டனர். அதில், மதுரையைச் சேர்ந்த கேசவ பாண்டியன் மகன் கிரஜேஷ் என்பவர், 1.44 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
வியாபாரத்துக்காக எடுத்துச் செல்வதாக கிரஜேஷ் கூறிய நிலையில், போதிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் இடம் ஒப்படைக்கப்பட்டு, பல்லடம் சார் கருவூல அலுவலகத்தில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

