/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புரியாத புதிராக நிலவகை மாற்றம்! நிர்மூலமான நல்லாற்றுக்கு எப்போது ஏற்றம்?
/
புரியாத புதிராக நிலவகை மாற்றம்! நிர்மூலமான நல்லாற்றுக்கு எப்போது ஏற்றம்?
புரியாத புதிராக நிலவகை மாற்றம்! நிர்மூலமான நல்லாற்றுக்கு எப்போது ஏற்றம்?
புரியாத புதிராக நிலவகை மாற்றம்! நிர்மூலமான நல்லாற்றுக்கு எப்போது ஏற்றம்?
ADDED : நவ 21, 2025 06:34 AM

நி லவகை மாற்றத்தில் உள்ள பெரும் குழப்பத்தால், நல்லாற்றை மீட்டெடுப்பது என்பது, பெரும் சவாலானதாக மாறியிருக்கிறது.
ஒரு காலத்தில் நாகரிகம் தோன்றிய இடமாக இருந்தது, நல்லாறு. ஆற்றுநீரில் குளித்து, கோவிலில் வழிபட்ட தலைமுறையும் இருந்திருக்கிறது.
தற்போது கழிவுநீரால் மாசடைந்துள்ள போதிலும், பூண்டி அருகேயுள்ள நல்லாற்று படுகையில், சிலர் வழிபாடு நடத்துவதையும் பார்க்க முடிகிறது.
அவிநாசி நகராட்சி எல்லைக்குட்பட்ட மங்கலம் ரோடு பாலத்தில் இருந்து, திருமுருகன்பூண்டி நகராட்சி கடந்து செல்லும் நல்லாற்று வழித்தடத்தின் பல இடங்கள் ஆக்கிரமிப்பாலும், வகை மாற்றத்தாலும் சிதிலமடைந்திருக்கிறது.
நீர்வளத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பூண்டி நகராட்சி எல்லைக்குள், அணைப்புதுார் என்ற இடத்தில், நல்லாற்றை ஆக்கிரமித்திருந்த, 130 வீடுகள் அகற்றப்பட்டன. இருப்பினும், பூண்டியை பொறுத்தவரை, ஒரு கரையில் தான் சர்வே செய்யப்பட்டிருக்கிறது; மறுகரையில் சர்வே செய்யப்படவில்லை.
வருவாய்த்துறையினர் மனது வைத்தால் தான் சர்வே பணியை முடித்து, ஆற்றின் எல்லையை வரையறுக்க முடியும்; ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.
நீர்நிலையொட்டி, தீர்வாகாத தரிசு நிலம் என்ற வகைபாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நிர்வாக சிக்கல் இருக்கிறது. மழை வெள்ளத்தின் போதும், இந்த நிலை வகைப்பாட்டில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகும்; ஆனால், அவற்றை அப்புறப்படுத்துவதில் நிர்வாக சிக்கல் இருக்கிறது. பொதுவாக, ஆறு, ஓடையின் இருபுறமும் கரை இருக்க வேண்டும்.
ஆனால், நல்லாற்றின் பல இடங்களில் கரைகளையே பார்க்க முடியாது. நல்லாற்றின் தற்போதைய நிலைக்கு காரணம், முழுக்க, முழுக்க செயற்கை இடர்பாடு தான். வருவாய்த்துறையினரும், நீர்வளத்துறையினரும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே நல்லாற்று ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆக்கப்பூர்வ சிந்தனை அவிநாசி குளம் காக்கும் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி:
'டிஜிட்டல் வரைபட உதவியுடன் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு, அகற்றப்பட வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. நல்லாறு ஓடை ஆக்கிரமிப்பை பொறுத்தவரை, பனந்தோப்பு, நத்தம், புறம் போக்கு என பல வரையறைக்குள் வீடு, கட்டடங்கள் உள்ளதாக தெரிகிறது.
வருவாய்த்துறை ஆவணங்களின் படி உறுதி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலை மேம்படுத்தும் பணியை உறுதிப்படுத்த வேண்டும். குளம், குட்டை, நீர்நிலை போன்றவற்றை துார்வாரி சுத்தம் செய்ய தன்னார்வ அமைப்பினர் பலரும் தயாராக உள்ள நிலையில், ஆக்கிரமிப்பு சர்ச்சைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்; அதற்கான ஆக்கப்பூர்வ சிந்தனை அவசியம்.
ஆக்கிரமிப்பு அகலட்டும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பழனிசாமி:
கோவை மாவட்டம், அன்னுார் அருகே துவங்கி, நிறைவடையும் ஊத்துக்குளி ஒன்றியம், அக்ரஹார பிரிவு வரையிலான நல்லாற்று வழித்தடம் முழுக்க உள்ள நல்லாற்றை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட நீர், நல்லாற்று நீர் வழித்தடமான நஞ்சராயன் குளத்தில் கலக்கிறது. அந்த நீர் மாசடைவது தவிர்க்கப்பட வேண்டும்.
நல்லாற்று நீர், மீண்டும் விவசாய பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும். இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தமிழக அரசும், நீர்வளத்துறையினரும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
நல்லாறு பாதுகாப்பு என்பது, மக்கள் இயக்கமாக மாறி, நீர்வளத்துறையினரின் கவனத்துக்கு, நல்லாறு பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையை கொண்டு செல்வது அவசியம்.

