ADDED : ஏப் 07, 2025 05:41 AM

திருப்பூர்; ராமநவமி நாளான நேற்று, திருப்பூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஸ்ரீராமர் அவதரித்த தினமே, ராம நவமி; இந் நாளில், விஷ்ணு பகவானின் அவதாரமாகிய ராமபிரானை மக்கள் வழிபடுகின்றனர். ராமநவமி நாளான நேற்று, திருப்பூர் சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவில், இந்திரா நகர் ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.
மகா திருமஞ்சனத்தை தொடர்ந்து, ஸ்ரீராமர், சீதாபிராட்டி மற்றும் லட்சுமணர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள், ஆஞ்சநேயருக்கும், ராமபிரானுக்கும், துளசி மாலை சாற்றி வழிபட்டனர். பக்தர்கள், 'ஸ்ரீராமஜெயம்' என்று எழுதிய காகிதத்தில் மாலை தயாரித்து, சுவாமிக்கு சமர்ப்பித்து வழிபட்டனர்.
''ராமபிரானை வழிபடுவதன் மூலம், எத்தகைய துன்பம் வந்தாலும், கலங்காத மனநிலையையும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் ஆற்றலும் கிடைக்கும்'' என, பட்டாச்சாரியர்கள் கூறினர்.

