/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்டுகொள்ளப்படாத கரைப்புதுார் ஊராட்சி
/
கண்டுகொள்ளப்படாத கரைப்புதுார் ஊராட்சி
ADDED : நவ 23, 2025 07:04 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியத்தில் அதிகப்படியான மக்கள் தொகை மற்றும் வருவாய் அளிக்கும் ஊராட்சியாக கரைப்புதுார் உள்ளது. இங்கு, விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளும் பரவலாக உள்ளன.
ஊராட்சிக்கு உட்பட்டு, கரைப்புதுார், காளிநாதம்பாளையம், குப்பிச்சிபாளையம், லட்சுமி நகர், மீனாம்பாறை, முல்லை நகர், அக்கணம்பாளையம், அவரப்பாளையும், பொன் நகர், அருள்புரம், செந்துாரன் நகர் உள்ளிட்ட, 39 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றை சார்ந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
திருப்பூர் பனியன் நிறுவனங்களை சார்ந்து, நுாற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும் தங்கி வேலை பார்க்கின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கும், பல்லடம் நகராட்சிக்கும் மத்தியில் அமைந்துள்ளதால், தொழில் ரீதியாகவும் இப்பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், குக்கிராமங்களும் தொழில் வளர்ச்சி மிகுந்த பகுதிகளாக மாறிவருகின்றன.
பின்தங்கிய தேவைகள் பொதுமக்கள் கூறியதாவது:
அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு இணையாக, போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஊராட்சியில் இல்லை. நகராட்சிக்கு இணையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதி இன்னும் ஊராட்சியாகவே உள்ளது.
மருத்துவ மற்றும் சாலை வசதி குறைபாடு, குவிந்து கிடக்கும் குப்பைகள், தேங்கி கிடக்கும் கழிவு நீர், சுகாதார சீர்கேடு என, ஊராட்சியின் அடிப்படைத் தேவைகள் பின்தங்கி உள்ளன. ஒன்றியத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் இந்த ஊராட்சியில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.
பஸ் வசதி இல்லை தொழிலாளர்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதியில், 24 மணி நேர மருத்துவ வசதிகள் இன்றி, தொழிலாளர்கள், பல்லடம் அல்லது திருப்பூர் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பாலான குக்கிராமங்களுக்கு செல்வதற்கான போதிய பஸ் வசதிகளும் இங்கு கிடையாது.
இவ்வாறு, நகராட்சிக்கு இணையாக உள்ள கரைப்புதுார் கிராமம், இன்றுவரை ஊராட்சியாகவே உள்ளது. இதை பேரூராட்சியாக தரம் உயர்த்தவோ அல்லது ஊராட்சியை பிரித்து புதிய ஊராட்சியை உருவாக்கும் பட்சத்தில், நிர்வாகப் பணிகள் எளிதாவதுடன், மக்களின் அடிப்படைத் தேவைகளும் முறையாக கிடைக்கும்.
கரைப்புதுார் ஊராட்சி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

