ADDED : நவ 23, 2025 07:04 AM

திருப்பூர்: திருப்பூர், காவிலிபாளையம் - கணியாம்பூண்டி அணுகுபாதை, சாக்கடை நீரால் சூழப்பட்டிருப்பதால், அவ்வழியாக பயணிப்போர் திண்டாடுகின்றனர்.
திருப்பூர், காவிலிபாளையத்தில் இருந்து கணியாம்பூண்டிக்கு செல்லும் பாதையில், கணியாம்பூண்டி மட்டுமின்றி, சோளிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு, மக்கள் சென்று வருகின்றனர்.
பெரும்பாலும், டூவீலர் மற்றும் வாகனங்களில் மக்கள் சென்று வரும் நிலையில், இந்த பாதை முழுக்க சாக்கடை நீரால் சூழப் பட்டிருக்கிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
காவிலிபாளையத்தில் இருந்து இந்த பாதை வழியாக செல்லும் போது, கணியாம்பூண்டிக்கு, 2.5 கி.மீ., தொலைவு மட்டுமே.
ஆனால், இந்த பாதை முழுக்க சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், வஞ்சிபாளையம் ரோட்டில் சென்று, 5 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியிருக்கிறது.
இந்த ரோட்டின் அருகே, 200க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய 'சைட்' உள்ளது. அங்குள்ள வீடுகளுக்கு சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள், திறந்தவெளியில் சாக்கடை நீரை வெளியேற்றுகின்றனர்.
இந்த சாக்கடை நீர் தான், ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.

