/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் போராட்டம் வலுவாகிறது
/
விவசாயிகள் போராட்டம் வலுவாகிறது
ADDED : பிப் 10, 2025 11:53 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் முழுக்க, தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வெள்ளகோவில், தாராபுரம், காங்கயம், மூலனுார் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்களின் தாக்குதலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கிறது. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
தாராபுரம் தாசில்தார், விவசாய அமைப்பினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'நாய்கள் கடித்து, இறந்த ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக, முன்மொழிவுகள் அனுப்பி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இழப்பீடு வழங்கும் அரசாணையை, இரு நாட்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என கூறியிருந்தார்.
ஆனால், 2 நாள் கடந்தும் எவ்வித அரசாணையும் வரவில்லை. இதேபோல், கடந்தாண்டு, நவ., 22ல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர். '45 நாட்களுக்குள் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணை பெறப்படும்' என, வருவாய் துறையினர் உறுதியளித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதிகள் பொய்த்து வருவதால், தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட போராட்டக்களத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
நாய் சிக்கியது
நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பெண் நாய் ஒன்று குட்டி ஈன்றது.
கடந்த 7-ல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற இரு கர்ப்பிணிகள் உள்பட 5 பேரை இந்த நாய் துரத்திக்கடித்தது. கடந்த மூன்று நாட்களாக முயன்று, நேற்று மாலை மாநகராட்சி ஊழியர்கள், குட்டியுடன் நாயைப் பிடித்து சென்றனர்.
நாய்கள் மர்ம மரணம்
பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சி, எஸ்.ஏ.பி., சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில், 5 நாய்கள் மர்மமான முறையில் இறந்தன.
அப்பகுதியினர் கூறுகையில், 'திருட்டு ஆசாமிகள் யாரேனும், திட்டமிட்டு தெரு நாய்களை கொன்றார்களா... அல்லது விவசாய நிலங்கள், கோழி பண்ணைகளில், எலிகளுக்கு விஷ மருந்து கலந்த உணவுப் பொருட்களை உண்டு நாய்கள் இறந்ததா என்ற சந்தேகமும் உள்ளது'' என்கின்றனர்.

