/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலட்சியத்தின் விலை குடிநீர் தட்டுப்பாடு
/
அலட்சியத்தின் விலை குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மார் 18, 2024 12:46 AM

பல்லடம்:வழக்கமாக, கோடைக்காலம் துவங்கினாலே தண்ணீர் பற்றாக்குறையும் தலைதுாக்க ஆரம்பித்து விடும். கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை கிடைக்காததால், தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஒருபுறம் வறட்சி காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அணைகளில் நீர்வரத்து குறைந்து, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கவலை கொள்ளாமல், அதிகாரிகள், பொதுமக்கள், அலட்சியத்துடன் குடிநீரை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு இணையாக குடிநீர் வினியோகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இடையே, கோடை வெப்பம் காரணமாக, குடிநீர் தேவை வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளது.
எத்தனையோ கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், குடிநீரை வீணடிக்கும் செயல்கள் பரவலாக நடந்தே வருகின்றன.
பொது குடிநீர் வினியோகத்துக்காக வீதிகளில் அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அடிக்கடி குடிநீர் வெளியேறுவதும், குடிநீர் குழாய்களை திறந்தே வைத்து பொதுமக்களை குடிநீரை வீணாக்குவதும் பரவலாக நடந்து வருகிறது. மட்டமான குழாய்கள், தண்ணீர் 'டேப்' இன்றி பயன்படுத்தப்படும் பொது குழாய்களால் குடிநீர் வீணாகிறது. அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை.
இதே அலட்சியப் போக்கு நீடித்தால், எதிர்வரும் கோடை நாட்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் குடங்களுடன் ரோட்டுக்கு வரும் அவலம் நிச்சயம் ஏற்படும்.

