/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடுமாங்காய் விற்பனைக்கு வந்தாச்சு வரத்து குறைவால் விலை உயர்வு
/
வடுமாங்காய் விற்பனைக்கு வந்தாச்சு வரத்து குறைவால் விலை உயர்வு
வடுமாங்காய் விற்பனைக்கு வந்தாச்சு வரத்து குறைவால் விலை உயர்வு
வடுமாங்காய் விற்பனைக்கு வந்தாச்சு வரத்து குறைவால் விலை உயர்வு
ADDED : மார் 18, 2024 12:01 AM

உடுமலை:பருவநிலை மாற்றத்தால், மேற்குத்தொடர்ச்சி மலையில், வடுமாங்காய் விளைச்சல் பாதித்து, சமவெளிப்பகுதியில், விற்பனை விலை உயர்ந்துள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில், பல்வேறு அரிய வகை மரங்கள், மூலிகைகள் உள்ளன. இதில், ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில், விளையும் வடுமாங்காய்க்கு அனைத்து பகுதி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
வனப்பகுதியில், மானாவாரியாக விளையும், இவ்வகை மாங்காய்களை, அங்குள்ள 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச்சேர்ந்த மக்கள் சேகரித்து வந்து சமவெளிப்பகுதியில், விற்பனை செய்கின்றனர்.
வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை, வடுமாங்காய் சீசன் ஆகும். திருமூர்த்திமலை, குருவியாறு, குட்டையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மறையூரில் இருந்தும் வடுமாங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்தாண்டு, வனப்பகுதியில் போதியளவு வடகிழக்கு பருவமழை பெய்யாதது மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக, மரங்களில், பூக்கள் உதிர்ந்து, வடுமாங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், உடுமலை நகரில், தற்போது, கிலோ 300 ரூபாய் வரை, வடுமாங்காய் விற்பனையாகிறது; கடந்தாண்டை விட கிலோவுக்கு நுாறு ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
வழக்கத்தை விட வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ குணம் மிக்கதாக இருப்பதால், வடுமாங்காய் விலை அதிகரித்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.
இன்னும் சில வாரங்களில், வரத்து அதிகரித்தால், விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

