/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் பசுமை 'சிப்காட்' அமைய எதிர்பார்ப்பு மாவட்ட நிர்வாகம் முயற்சித்தால் வரும் வாய்ப்பு
/
திருப்பூரில் பசுமை 'சிப்காட்' அமைய எதிர்பார்ப்பு மாவட்ட நிர்வாகம் முயற்சித்தால் வரும் வாய்ப்பு
திருப்பூரில் பசுமை 'சிப்காட்' அமைய எதிர்பார்ப்பு மாவட்ட நிர்வாகம் முயற்சித்தால் வரும் வாய்ப்பு
திருப்பூரில் பசுமை 'சிப்காட்' அமைய எதிர்பார்ப்பு மாவட்ட நிர்வாகம் முயற்சித்தால் வரும் வாய்ப்பு
ADDED : பிப் 20, 2024 11:40 PM

திருப்பூர்;விரைவில் புதிய 'சிப்காட்' வளாகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திருப்பூரில் 'பசுமை சிப்காட்' அமைய வாய்ப்புள்ளதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பட்ஜெட்டில், திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்த்தபடி, மின் கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், மின்துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பு வெளியாகலாம் என்ற சூழலும் உள்ளது.
அதுமட்டுமல்ல, திருப்பூருக்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்று கலங்கும் தொழில்துறையினர், 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' சிப்காட் அமையும் போது, புதிய தொழில் வாய்ப்புகளை பெறவும் வாய்ப்புள்ளது.
பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்தில் புதிய 'சிப்காட்' வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது, திருப்பூரில் தான் அமையும் என்று, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி தொழில்நுட்பத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக, பசுமை தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது. அவ்வகையில், திருப்பூரில் பசுமை சார் உற்பத்திக்கு பிரத்யேகமாக 'சிப்காட்' அமையும் என்ற நம்பிக்கை பட்ஜெட்டுக்கு பின் மேலும் வலுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 300 ஏக்கர் பரப்பில், 'சிப்காட்' அமைக்க, தமிழக அரசு உத்தேசித்துள்ளது. கோவை - திருப்பூர் மாவட்டங்களில், நிலமதிப்பு மிக அதிகம் என்பதால், புறநகர் பகுதியில் 'சிப்காட்' அமைக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது; மாவட்ட நிர்வாகமும், அதற்கு ஏற்ப, நான்கு இடங்களில் நிலம் கண்டறிந்து, பரிந்துரை செய்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழக அரசு, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வளம் குன்றா வளர்ச்சி நிலையை காட்சிப்படுத்தும் 'சிப்காட்' அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சாயக்கழிவு சுத்திகரிப்பு, மறுசுழற்சி ஆடை உற்பத்தி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, பனியன் வேஸ்ட் கழிவில் இருந்து நுால் உற்பத்தி என, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், திருப்பூர் முன்னோடியாக உள்ளது.
'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், பசுமை சார் உற்பத்தி நிறுவனங்களுக்கான 'சிப்காட்' அமைக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, நிலத்தை தேர்வு செய்து கொடுத்தால், புதிய 'சிப்காட்' திருப்பூர் மாவட்டத்திலேயே அமைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

