/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல வருஷமாச்சு! அடிப்படை வசதி கூட இல்லாமல் திணறல்
/
ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல வருஷமாச்சு! அடிப்படை வசதி கூட இல்லாமல் திணறல்
ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல வருஷமாச்சு! அடிப்படை வசதி கூட இல்லாமல் திணறல்
ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல வருஷமாச்சு! அடிப்படை வசதி கூட இல்லாமல் திணறல்
ADDED : ஜன 06, 2025 01:04 AM

உடுமலை; அகல ரயில்பாதை பணிக்குப்பிறகு, உடுமலை ரயில்வே ஸ்டேஷன், பயன்பாட்டுக்கு வந்து, 10 ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது. மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மட்டுமாவது மேற்கொள்ள, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள், 2009ல் துவங்கி, 2015ல் நிறைவு பெற்று, ரயில் போக்குவரத்து துவங்கியது. மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக தரம் உயர்த்திய பிறகு, கூடுதல் ரயில் சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்கள் கூட மீண்டும் இயக்கப்படாமல், தற்போது வரை, உடுமலை பகுதி பயணியர், போராடி வருகின்றனர்.
ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, உடுமலை பகுதியில் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால், பயன்பாட்டுக்கு வந்த, பல ஆண்டுகளாகியும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது உடுமலை வழியாக திருச்செந்துார் சிறப்பு ரயில், அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில், கோவை - மதுரை ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், 3 பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில், மேற்கூரை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பருவமழை சீசனில், மழையில் நனைந்தபடியே பயணியர் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். வெயில் காலத்தில், குழந்தைகள், பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
மேலும், ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு கருவியும் பயன்பாட்டில் இல்லை; குழாய்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக உள்ளன.
தொலைதுாரத்திலிருந்து வரும் பயணியர், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கழிப்பிட வசதியில்லாமல் இருப்பதால் வேதனைக்குள்ளாகின்றனர்.
மேற்கூரை, குடிநீர், கழிப்பிடம் ஆகிய முக்கிய தேவைகளை ஏற்படுத்த பல ஆண்டுகளாக பயணியர் வலியுறுத்தியும், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.
நாள்தோறும், நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் ஸ்டேஷனில், வசதிகளை ஏற்படுத்த, மக்கள் பிரதிநிதிகளும், ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துவது அவசியமாகும்.
ரயில்வே ஸ்டேஷன் அருகில், புதர் மண்டி காணப்படும் பகுதி, சமூக விரோத செயல்கள் மையமாகி விட்டது.
'பார்சல் சர்வீஸ்' தேவை
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், 2009ல், அகல ரயில்பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் வரை, பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாளும் வசதி இருந்தது.
அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பின், மீண்டும் இத்தகைய சேவைகள் துவக்கப்படவில்லை.
உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயமும், அது சார்ந்த பல்வேறு தொழில்களும், அதிகளவு உள்ளன.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 50க்கும் மேற்பட்ட நுாற்பாலைகளும், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அதிகளவு காகித ஆலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருள் மற்றும் உற்பத்தி பொருள், சாலை போக்குவரத்து வழியாகவே பெறப்படுகிறது.
தொழில்கள் மேம்பாட்டுக்காக, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடனான முனையம் அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.