/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரத்தில் சீறிப்பாயும் எதிர்ப்பலைகள் மாநகராட்சிக்கு கடும் நெருக்கடி
/
குப்பை விவகாரத்தில் சீறிப்பாயும் எதிர்ப்பலைகள் மாநகராட்சிக்கு கடும் நெருக்கடி
குப்பை விவகாரத்தில் சீறிப்பாயும் எதிர்ப்பலைகள் மாநகராட்சிக்கு கடும் நெருக்கடி
குப்பை விவகாரத்தில் சீறிப்பாயும் எதிர்ப்பலைகள் மாநகராட்சிக்கு கடும் நெருக்கடி
ADDED : ஆக 10, 2025 02:46 AM

இ ந்திய கம்யூ.,எம்.பி., சுப்பராயன் மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளதால், குப்பை விவகாரம் சூடுபிடித்துள்ளது. சீறிப்பாயும் எதிர்ப்பலைகளை மேயரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் சமாளிக்க இயலாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் தினசரி சேகரமாகும் 800 டன் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லை. கிராமங்களில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு, விழிப்புணர்வு காரணமாக, பொதுமக்கள் அனுமதிப்பதில்லை. தொலைநோக்குப் பார்வையில் குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சி நிர்வாகத்தினர் தீர்வு காணாததுதான் இதற்குப் பிரதான காரணம்.
திகைக்கும் அதிகாரிகள் குப்பையைக் கொட்ட எங்கு சென்றாலும், மக்களின் எதிர்ப்பலையை எதிர்கொள்ளும் மாநகராட்சி அதிகாரிகள், செய்வதறியாது கையை பிசைந்து நிற்கின்றனர். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நேற்று, குப்பை பிரச்னையால், திருப்பூர் சுகாதாரச் சீர்கேட்டுடன் திகழ்வதாக, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மீது பாய்ந்தார்.
''அ.தி.மு.க., ஆட்சியிலும் இதே குப்பை பிரச்னை இருந்தது; அவர்கள், அதை கையாண்டது போன்று, தி.மு.க., மாநகர மன்றத்தால் முடியவில்லையே?'' என்ற கேள்விக்கு, ''அப்போது மக்கள் தொகை குறைவு; குப்பை கொட் டப்பட்ட பாறைக்குழிகள் நிரம்பவில்லை. அதனால், வெளியே தெரியவில்லை.
தற்போது, பாறைக்குழிகள் நிரம்பியுள்ளன; துர்நாற்றம் வீசுகிறது; நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு கிராம மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது; இதனால், பாறைக்குழியில் குப்பைக் கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது,'' என்று பதிலளித்தார் எம்.பி.,
செயல்படுது... ஆனா இல்ல ''மாநகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லை; 10 ஏக்கர் இடமிருந்தால் உடனே அதை வாங்கி குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளலாம் என துறை அமைச்சர் நேரு உறுதியளித்துள்ளார்'' என்ற எம்.பி.,யிடம், ''இடுவாய் கிராமத்தில், 72 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானதாக உள்ளது.
அதில், 12 ஏக்கர் பரப்பில் மூங்கில் பூங்கா அமைத்துள்ளனர்; 28 ஏக்கர் பரப்பில், சோலார் பேனல் பொருத்தியுள்ளனர். எஞ்சிய, 40 ஏக்கர் நிலம் மாநகராட்சி கமிஷனர் பெயரிலேயே உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் மவுனம் காக்கிறதே?'' என்ற கேள்விக்கு, ''நீங்கள் சொல்வது சரிதான். அங்குள்ள மக்களின் மனநிலை அறியாமல் நான் எதுவும் சொல்ல முடியாது,'' என்றும் பதிலளித்தார்.
''மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறதா, இல்லையா?'' என்ற கேள்விக்கு, ''செயல்படுது; ஆனால், தேவைக்கேற்ப செயல்படவில்லை'' என்றார். அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.,வின் கூட்டணிக்கட்சியாக திகழும் இந்திய கம்யூ.,வும், குப்பை விவகாரத்தில், மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாக சாடியுள்ளது.
குப்பை விவகாரத்தில் எதிர்ப்பலைகளை மேயரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் சமாளிப்பது 'சிம்ம சொப்பனமாக'வே இருக்கும்.