/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இல்லங்களில் உணவருந்தும் சூழல் உணவகங்களிலும் கிடைக்க வேண்டும்
/
இல்லங்களில் உணவருந்தும் சூழல் உணவகங்களிலும் கிடைக்க வேண்டும்
இல்லங்களில் உணவருந்தும் சூழல் உணவகங்களிலும் கிடைக்க வேண்டும்
இல்லங்களில் உணவருந்தும் சூழல் உணவகங்களிலும் கிடைக்க வேண்டும்
ADDED : ஜூன் 06, 2025 11:53 PM
ஜூன் 7, உலக உணவுப் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், ஒரு மையக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக்கருத்து, 'உணவுப் பாதுகாப்பில் அறிவியல்' என்பதே. அதாவது, உணவு தயாரிப்பு, சத்து மற்றும் உணவு பாதுகாப்பு அம்சங்களில் அறிவியல் ரீதியான அணுகுமுறை, ஆராய்ச்சி மற்றும் புதுமையை புகுத்துவதன் வாயிலாக தயாரிக்கப்படும் உணவின் பாதுகாப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான், அதன் பொருள்.
லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் திருப்பூரில், உணவு பாதுகாப்பின் மீது, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது, உணவு பாதுகாப்புத் துறை. காரணம், திரும்பும் திசையெங்கும் ஓட்டல், டீக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் என, உணவு தயாரித்து வழங்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். அனைத்து இடங்களிலும் சுத்தம் சுகாதாரத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பது தான் கேள்விக்குறி.
சுத்தம், சுகாதாரம், தரம் அவசியம்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் உணவுக் கூடங்கள், உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறுவது அவசியம்; அதற்கு குறைவாக வர்த்தகம் செய்யும் உணவகங்கள், உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் மற்றும் தரத்தை பின்பற்றுவது; பூச்சிகள் அண்டாமல் தவிர்ப்பது; மிக முக்கியமாக சுத்தமான நீரை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில், ஓட்டல் உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பணியில் தேவை முழுக் கவனம்
நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என நம்பி வரும் மக்களுக்கு, ஆரோக்கிய சீர்கேடு ஏற்படாத வகையில் உணவு தயாரித்து வழங்குவது, ஓட்டல் உரிமையாளர்களின் கடமை. உணவு தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வது துவங்கி, உணவு தயாரித்து, உணவு கழிவுகளை
அப்புறப்படுத்துவது வரை, தங்கள் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
பணியாளர்களுக்கு மருத்துவச்சான்றிதழ்
ஒவ்வொரு விஷயத்திலும் வாடிக்கையாளர்களின் உடல் நலனை நினைவில் கொண்டே செயல்பட வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ள பணியாளர்களை சமைக்கவோ, உணவு பரிமாறவோ அனுமதிக்க கூடாது; பணியாளர்கள், ஓராண்டுக்கு ஒரு முறை மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.எண்ணெயில் வறுத்தெடுக்கும் பலகாரங்கள் செய்யும் போது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால், அதில் உள்ள வேதிப்பொருள், கேன்சர், அல்சர் உள்ளிட்ட நோய்களை உருவாக்கிவிடும்.
உணவை மூடி வைக்க வேண்டும்
எந்தவொரு உணவு பொருட்களையும், திறந்தவெளியில் வைத்து தயாரிக்கக்கூடாது; மூடி வைக்க வேண்டும். உணவு தயாரிப்பின் போது, பரிமாறும் போது கையுறை, தலைக்கு உறை உள்ளிட்டவற்றை இட வேண்டும்.சுருக்கமாக சொன்னால், தங்கள் வீடுகளில் எந்தளவு சுத்தம், சுகாதாரத்துடன் உணவு சமைத்து, குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து உண்கிறோமோ, அதே மனநிலையில் தான், தங்கள் உணவுக் கூடங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் தரமான உணவு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.---