/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வர் குளறுபடி சரியாகும் காசோலை பிரச்னை தீரும்
/
சர்வர் குளறுபடி சரியாகும் காசோலை பிரச்னை தீரும்
ADDED : அக் 14, 2025 12:52 AM
திருப்பூர்:புதிய 'சாப்ட்வேர்' பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சர்வர் குளறுபடி காரணமாக, காசோலைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க இயலவில்லை என, வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ''விரைவில் சர்வர் குளறுபடி சரிசெய்யப்படும்'' என்று மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாத் கூறினார்.
மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகளில் டிபாசிட் செய்யப்படும் காசோலைகளை, அன்றைய தினமே 'கிளியரன்ஸ்' செய்யும் தொழில்நுட்பம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த, 4ம் தேதி முதல், இந்நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, டிபாசிட் செய்யப்படும் காசோலை மீது அன்று இரவு, 7:00 மணிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பதில் அளிக்காவிட்டால், தானியங்கி முறையில் காசோலை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், வங்கிகளில் செலுத்திய காசோலைகள் உடனுக்குடன் 'கிளியரன்ஸ்' ஆகவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், ''கடந்த 4ம் தேதி முதல், காசோலை மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அதிகபட்சம் மூன்று நாட்களாகிவிடுகிறது. தீபாவளி பண்டிகை நேரத்தில் அவதியுற வேண்டியுள்ளது' என்றனர்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாத்திடம் கேட்டபோது, ''இந்த நடைமுறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில், சர்வர் குளறுபடி ஏற்படுவது இயல்புதான். அதன்படி சில நாட்களாக சர்வர் சரிவர ஒத்துழைக்காமல் இருக்கிறது; தொழில்நுட்ப பணியாளர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நாடு முழுவதும் இப்பிரச்னை இருக்கிறது. விரைவில், சர்வர் குளறுபடி சரிசெய்யப்படும்'' என்றார்.