
திருப்பூர்: தொழிலாளர்கள் பலருக்கும், தீபாவளி போனஸ் நேற்று கிடைத்தது. திருப்பூரில் இன்று கடைவீதிகள் களைகட்டும்.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவதற்கு போனஸ் உதவுகிறது. ஆயுத பூஜை வந்தாலே, தீபாவளி போனஸ் எதிர்பார்ப்பு, பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், நிட்டிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், டையிங், எம்ப்ராய்டரிங், ஓட்டல்கள், கடைகள் என, அனைத்து தொழிலாளர்களுக்கும், போனஸ் பட்டுவாடா நேற்று துவங்கியது. பெரும்பாலான நிறுவனங்களில், நேற்று வார சம்பளத்துடன், போனஸ் சேர்த்து வழங்கப்பட்டது.
இன்று முதல் விறுவிறு 'பர்சேஸ்'
தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி வருகிறது; நவ., 1ம் தேதி அரசு விடுமுறையென, நேற்று அறிவிப்பு வெளியானது. இதன்காரணமாக, வியாழன் துவங்கி ஞாயிறு வரை, நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையாக மாறியுள்ளது. வெளிமாவட்ட தொழிலாளர், சொந்த ஊர் பயணத்துக்கு முன்கூட்டியே தயாராகிவிட்டனர். போனஸ் கிடைத்தவர்கள், அதைக்கொண்டு தீபாவளி பண்டிகைக்கான 'பர்ச்சேஸ்' துவங்க இருக்கின்றனர். சுற்றுப்பகுதிகளில் இருந்தும், ஜவுளி எடுக்க இன்று மக்கள் திருப்பூரில் கூடுவார்கள் என்பதால், கடைவீதிகளில் மக்கள் அலைமோதும் சூழல் ஏற்படும் என்பதால், போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் வழங்கிவிட்டன; குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும், 23 அல்லது 26ம் தேதி சம்பளத்துடன் போனஸ் வழங்கி, தொடர்விடுமுறை அறிவிக்கவும் ஆயத்தமாகி வருகின்றன. எப்படியிருந்தாலும், கடைசி நேரத்தில் முட்டிமோத முடியாது; முன்கூட்டியே 'பர்ச்சேஸ்' முடிக்கலாம்; விரைவாக சொந்த ஊர் கிளம்பலாம் என்ற மனநிலையுடன், தொழிலாளர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.