/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டுப் போன' பட்டு வளர்ச்சித்துறை கட்டடம்
/
'பட்டுப் போன' பட்டு வளர்ச்சித்துறை கட்டடம்
ADDED : ஜூலை 28, 2025 10:37 PM

அவிநாசி; 'அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான இடம் மற்றும் கட்டடம் சமூகவிரோதி களின் கூடாரமாக மாறி விட்டது. இதனை மீட்டு உரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடுவச்சேரியில், வேளாண் துறையின் கீழ் செயல்படும் பட்டு வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் பழமையான கட்டடம் உள்ளது. சுற்றுப்பகுதியில் பட்டுப் புழு வளர்ப்பு அதிகளவில் இருந்த காலகட்டத்தில் இந்த இடம் பட்டுவளர்ச்சித் துறைக்கான மையமாக செயல்பட்டது.
காலப் போக்கில் பட்டுப்புழு வளர்ப்பு குறையத் துவங்கிய நிலையில், 30 ஆண்டுகளாக இந்த மையம் எந்த பயன் பாடும் இல்லாமல் செயல்பாட்டை நிறுத்தியது.
அதன்பின் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ள வில்லை. இதனால், தற்போது இந்த கட்டடம் போதை நபர்கள் உள்ளிட்ட சமூக விரோத கும்பலின் கூடாரமாக மாறி விட்டது. மேலும், சுற்றியுள்ள இடமும் முட்புதர்கள் வளர்ந்து வீணாகி வருகிறது.
அவிநாசி சுற்றுப்பகுதியில், தற்போது அத்திக் கடவு திட்டம் மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகி வருகிறது. சுற்றுப்பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இதனால், மல்பெரி சாகுபடியை ஊக்குவிக்கலாம். பட்டு வளர்ச்சித்துறை சார்பில் இந்த மையத்தை மீட்டெடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இங்குள்ள நிலத்தை அவிநாசி சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விதைப் பண்ணை, இளம்புழு வளர்ப்பு மையம், பட்டுப்புழு வளர்ப்பு போன்றவை ஏற்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பட்டு வளர்ச்சி மையம், விவசாயிகளுக்கான பயிற்சி மையம் ஆகியன இந்த கட்டடத்தில் அமைத்து செயல்படுத்தலாம்.
இதன் மூலம் அவிநாசி பகுதி மல்பெரி விவசாயிகள் பயன்பெறுவர். பட்டுப்புழு வளர்ப்பு தொழில் மேலும் அதிகரிக்கும், என்று சுற்றுப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

