புதிய சிந்தனைகள், நவீனத் தொழில்நுட்பங்களின் கலவையாக 'ஸ்டார்ட் அப்'கள் மலர்கின்றன. இதில்,கோலோச்சுபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். இதேபோல், 'இ - காமர்ஸ்' துறையின் வளர்ச்சியும் அளப்பரியதாக உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே முத்திரை பதிக்க முடியும் என்றல்லாது, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் சாதிக்க வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
பின்னலாடைத்துறையிலும், புதிய 'ஸ்டார்ட் அப்'களும், 'இ-காமர்ஸ்' உள்ளிட்டவையும் வெற்றிகரமாக கால்பதிக்கத் துவங்கியிருக்கின்றன. இதை முன்னிறுத்தி, திருப்பூரில் நேற்று நடந்த கருத்தரங்கில் கூறப்பட்ட இனிப்பான தகவல்: ''ஸ்டார்ட் அப்கள் துவங்க ஆர்வம் பெருகி வருகிறது; திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 350 ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டுள்ளன. 'இ காமர்ஸ்' மூலம் பின்னலாடைத் தொழிலிலும் தொழில்முனைவோர் பலரும் முத்திரை பதிக்கத் துவங்கியிருக்கின்றனர்''. ஆம். வாய்ப்புகளுக்கு வானமே எல்லை
'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்( சைமா) மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 'இ-காம் ஸ்கேல் -2 'என்ற தொழில் வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடந்தது. 'சைமா' அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு பொறுப்பாளர் குரு சங்கர் வரவேற்றார்.
'ஸ்டார்ட் அப்' அலுவலகம்திறக்க வேண்டும்
கருத்தரங்கை துவக்கிவைத்து பேசிய 'சைமா' துணை தலைவர் பாலச்சந்தர்: 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு திட்டத்தால், அரசு வழிகாட்டுதலை பெற்று, பல்வேறு புதிய தொழில்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், தொழிலாக வடிவம் பெறுகின்றன. திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் ரீதியாக, பல்வேறு டிஜிட்டல் தொழில் வாய்ப்புகளும் உள்ளன. எதிர்காலத்தில், 'இ-காமர்ஸ்' மூலம் எளிதாக சம்பாதிக்கும் வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. தமிழக அரசு, திருப்பூர் மாவட்டத்திலும், 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு திட்ட அலுவலகத்தை திறக்க முன்வர வேண்டும்.
'ஆன்லைன்' வர்த்தகம்பொருளீட்டுதல் எளிது
மணிகண்டன், உறுப்பினர், 'சைமா':
திருப்பூர் பின்னலாடை தொழிலில், புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட வேண்டும். குறிப்பாக, எவ்வித முதலீடும் இல்லாமல், 'ஆன்லைன்' வர்த்தகம் மூலம் பொருள் ஈட்டுகின்றனர். இனி வரும் தொழில்துறையினரும், 'ஆன்லைன்' வர்த்தகம் செய்யவும், 'பிராண்டிங்' முறையில் ஆடைகளை முன்னிலைப்படுத்தவும் திட்டமிட வேண்டும்.
வழிகாட்டி கருத்தரங்கில், 'பெட்டிக்கடை' வணிக தள நிறுவனர் ஆகாஷ், முன்னணி பிராண்டிங் மற்றும் வணிக ஆலோசகர்கள் பிரவீன்ராஜ், சஞ்சய் விஜயகுமார், பிரஹத் ரூபன் ஆகியோர், 'பவர் பாயின்ட்' வாயிலாக விளக்கினர். தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கில், திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோர், இளைஞர்கள் பங்கேற்றனர்
- நமது நிருபர் -.